பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

மாயா விநோதப் பரதேசி

யையும், இடும்பன் சேர்வைகாரனையும் கேவலம் திரணமாக மதித்து அதிகாரமும் அட்டகாசமும் செய்து வந்தாள். அவளது அபாரமான செல்வத்தையும் கருதி மற்றவரும் அவளிடம் பணிவாகவும், அவளது மனம் கோணாமலும் நடந்து கொண்டனர்.

ரமாமணியம்மாள் முதல் வகுப்புப் பிரயாணிகளது விடுதிக்குள் நுழைந்து அவ்விடத்தில் போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டவுடன், அவளது தாய் அவ்விடத்தில் காணப்பட்ட ஓர் இரும்பு பெஞ்சியின் மேல் தனது மூட்டையை வைத்துவிட்டுத் தானும் அதன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். ரமாமணியம்மாளின் தகப்பனார் தமது கைகளில் இருந்த கூஜாக்களை மூட்டையின் பக்கத்தில் வைத்தார். உடனே ரமாமணியம்மாள் அவரிடம் தணிவான குரிலில், "அப்பா! நம்முடைய பக்கிரியா பிள்ளை வந்திருக்கிறாரா என்று பாருங்கள். பெட்டிகளை எல்லாம் நிறுத்து, டிக்கெட்டுகளை வாங்குங்கள். இடும்பன் சேர்வைகாரனுக்குத் தெரியாமல், பக்கிரியா பிள்ளையிடம் ஒரு டிக்கட்டுக் கொடுங்கள். நமக்கெல்லாம் முதல் வகுப்பு டிக்கெட்டு வாங்குங்கள். இடும்பன் சேர்வைகாரனுக்கும், போயிக்கும் மூன்றாவது வகுப்பு டிக்கெட்டு வாங்குங்கள். அவர்கள் நம்முடைய பெட்டிகளை எல்லாம் வைத்துக் கொண்டு முதல் வகுப்பு வண்டிக்குப் பக்கத்தில் வேலைக்காரர்களுக்காகச் சேர்க்கப் பட்டிருக்கும் வண்டியில் உட்கார்ந்து கொள்ளட்டும். நமக்கும் பக்கிரியா பிள்ளைக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்கிறதாக இடும்பன் சேர்வைகாரன் சந்தேகிக்காதபடி அவர் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளும்படி சொல்லுங்கள்" என்று கூறினாள்.

அதைக் கேட்டுக் கொண்ட அவளது தந்தை அப்படியே செய்வதாகச் சொல்லிவிட்டு அவ்விடத்தில் இருந்து போய், அரை நாழிகை நேரம் கழித்து மறுபடி திரும்பி அவளிடம் வந்து, "அம்மா! பக்கிரியா பிள்ளை வந்து இடும்பன் சேர்வைகாரனுக்குத் தெரியாதபடி, ஜனக்கும்பலில் மறைந்து கொண்டிருக்கிறார். பெட்டிகளை எல்லாம் நிறுத்துப் பார்த்து டிக்கெட்டுகள் வாங்கி விட்டோம். மூன்றாவது வகுப்பு டிக்கெட்டுகள் இரண்டையும் சாமான்களின் டிக்கெட்டையும் இடும்பன் சேர்வைகாரனிடம்