பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

239

செய்யப்பட்டிருக்கிறது. உள்ளே இருக்கிறவர்கள் அந்த வண்டி முழுதிற்கும் பணம் கொடுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏறவேண்டாம்" என்று அதட்டிக் கூறினார். உள்ளே இருந்த ரமாமணியம்மாளது தந்தை உடனே தமது தலையை வெளியில் நீட்டி, "ஐயா! இவர் எங்களைச் சேர்ந்த மனிதர்தான். நாலு டிக்கெட்டுகள் வாங்கினது உங்களுக்கு ஞாபகம் இல்லையா? இவர் ஒரு காரியமாக வெளியில் போய்விட்டு வருகிறார். ஆகையால், இவரை மாத்திரம் உள்ளே விட்டு கதவை மூடிப் பூட்டி விடுங்கள்" என்றார். உடனே ஸ்டேஷன் மாஸ்டர் தேங்காய்ச்சில் போடப் பெற்ற நாய் போல அடங்கிப் போய், "ஒகோ அப்படியா! உங்களுடைய மனிதரா! சரி, அப்படியானால், ஏறிக்கொள்ளட்டும்" என்று நிரம்பவும் அன்பாகக் கூற, பக்கிரியாப் பிள்ளையை உள்ளே ஏற்றிவிட்டு வண்டியின் கதவை மூடி வெளியில் பூட்டி விட்டு, உள்ளே இருந்த ரமாமணியைப் பார்த்தபடி அவளது தந்தையோடு பேசத் தொடங்கி, "எனக்கும் மாசிலாமணிப் பிள்ளைக்கும் இப்போதைய நேற்றைய பழக்கமல்ல. அவருக்கும் எனக்கும் வெகு நாளாய் சிநேகம். அவருடைய தமையனார் சட்டைநாத பிள்ளைக்கும் என்னிடம் அத்யந்த பிரியம் உண்டு. அவர்களாவது, அவர்களுடைய மனிதர்களாவது வந்துவிட்டால், எங்களுக்குத் தெய்வத்தைக் காண்பது போல இருக்கும். அவர்கள் பொருட்டு நாங்கள் முதல் வகுப்பு வண்டியில் இருப்பவர்களைக் கூட இறக்கி விட்டு இடம் செய்து கொடுப்போம். அவர்கள் எங்கேயாவது போய்விட்டுத் திரும்பி வந்தால், நான் டிக்கெட்டே கேட்கிறதில்லை. அநேகமாய் அவர்கள் டிக்கெட்டு வாங்காமலேயே வந்து விடுவார்கள். ஆகையால், அதுபோலவே நீங்கள் திரும்பி வரும் போதும் என்னால் ஆன சகலமான உதவிகளையும் செய்யத் தடையில்லை" என்று கூறியபடி அவரோடு பன்னிப் பன்னி மேன் மேலும் பேச்சை வளர்த்துக் கொண்டே நின்று அடிக்கடி ரமாமணியம்மாளைக் கடாக்ஷித்த வண்ணம் இருந்தார்.

ரமாமணியம்மாளின் மனம் முழுதும் பக்கிரியாப் பிள்ளையின் மீதே சென்று லயித்துப் போயிருந்தமையாலும், அவனோடு தான்