பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

மாயா விநோதப் பரதேசி

வரையில் எதேச்சையாக இருந்து அந்த இடத்தைத் தமது சொந்த வீடு போலவே மதித்துக் குதூகலமாய் மெய்ம்மறந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருந்த ரமாமணியம்மாள் முதலியோர் திடுக்கிட்டு அப்போதே தமது சுய உணர்வைப் பெற்று அது ரயில் வண்டி என்பதையும், வேறு மனிதரும் அந்த இடத்தில் இருக்க ஸ்தானங்கள் இருக்கின்றன என்பதையும் உணர்ந்தனர். ஆயினும், தமது ஏதேச்சாதிபத்தியத்தை இழந்துவிட யார்தான் எளிதில் சம்மதிப்பார்கள்? மற்ற மனிதர் உள்ளே வருவதைத் தடுப்பதற்குத் தமக்கு அதிகாரமில்லை என்பது தெரிந்திருந்தும், ரமாமணியின் தகப்பனார் விரைவாக எழுந்து, "யார் கதவைத் திறக்கிறது? இங்கே இடமில்லை. வேறே வண்டிக்குப் போங்கள்" என்று கூறிக் கொண்டே கதவண்டைப் பாய்ந்து அதை கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டார்.

வெளிப்பக்கத்தில் நின்ற ரயில் வண்டியின் கார்ட், "ஏனைய்யா தடுக்கிறீர்? நீங்கள் நாலு பேர் இருப்பதற்கு இடம் இருக்கிறதே! வண்டி பூராவையும் நீங்களே எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா என்ன? போம் அப்பால்" என்றார்.

அதைக் கேட்ட ரமாமணியின் தந்தை உடனே கலகலத்துப் போனார் ஆனாலும் தமது ஊக்கத்தைக் கைவிடாமல் கார்டைப் பார்த்துத் தமது பற்களைக் காட்டி நயந்து பேசத் தொடங்கி, "ஐயா! கும்பகோணம் ஸ்டேஷன் மாஸ்டர் உங்களிடம் சொன்னது நினைவில்லையா? நாங்கள் அவருக்கு நிரம்பவும் வேண்டியவர்கள். நாங்கள் பொழுது விடிகிற வரையில் பிரயாணம் செய்ய வேண்டியவர்கள். எங்களுக்கு அசௌகரியம் இல்லாமல் கொஞ்சம் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் செய்யும் உதவியை நாங்கள் மறக்க மாட்டோம்" என்று கூறினார்.

அதைக் கேட்ட கார்ட், "சரிதான் ஐயா; நகரும் அப்பால், உங்களுக்கு கும்பகோணம் ஸ்டேஷன் மாஸ்டர் வேண்டியவராக இருந்தால், அதற்காக, இன்னும் இரண்டு பேர் உட்காரும் இடத்தைக் காலியாக வைத்து, கம்பெனியாருக்கு நஷ்டம் உண்டாக்குவது நியாயமா? வேறே வண்டியில் இடமிருந்த வரையில் ஜனங்களை அதில் ஏற்றினோம். இப்போது ஒரு பெரிய