பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

மாயா விநோதப் பரதேசி

பட்டது. அவ்வாறு அந்த அம்மாளது தலைமயிர் பொதிர்ந்திருந்தது, அதன் அபாரமான செழிப்பினால் என்றே கொள்ள வேண்டுமன்றி, அவள் அதை அநாகரிகமாக வைத்திருந்தாள் என்று நினைக்க இடம் இல்லை. அந்த அம்மாளுடைய தோற்றமும், ஆடையாபரணங்களும், அவள் மூன்றாவது வகுப்பிற்குப் போகாமல் இரண்டாவது வகுப்பு டிக்கெட்டு வாங்கி வந்ததும், அவள் தக்க பெரிய மனுஷி என்பதை நன்றாக வெளிப்படுத்தின. அவளது உடம்பு தங்கப்பாளம் போலப் பழுத்திருந்தது ஆனாலும், ஆங்காங்கு திரைந்து சுருங்கிப் போயிருந்த தோல் அவளது வயது முதிர்ச்சியை நன்றாகக் காட்டியது. அந்த அம்மாள் தனது உடம்பின் மினுமினுப்பிற்கிசைந்தபடி பளபளப்பாகத் தோன்றிய நார்மடிப் புடவை ஒன்றை அணிந்து, நெற்றி, கழுத்து, கைகள் முதலிய சர்வாங்கத்திலும் பளிச்சென்று விபூதி பூசிக் கொண்டிருந்தாள். கழுத்தில் நான்கு வடங்கள் உள்ள தங்கச் சரடு ஒன்று அணியப் பெற்றிருந்தது. இந்தச் சரட்டில் நவரத்னங்கள் இழைக்கப் பெற்ற பெரிய முகப்பு காணப்பட்டது. அதுவுமன்றி தங்கக் குவளை கட்டப்பட்ட ருத்திராக்ஷ மாலையொன்று அந்த அம்மாளுடைய கழுத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தது. அந்த அம்மாளது வலது கைவிரல்களில் பளீர் பளீர் என்று சுடர் விட்டெரித்த வைர மோதிரம் இரண்டு காணப்பட்டன. அந்த அம்மாளது சுத்த சாத்விகமான முகத்தோற்றம், நார்மடிப் புடவை, விபூதி, ருத்திராக்ஷம் முதலியவை ஒன்று கூடி, அவள் அத்யந்த தெய்வபக்தி வாய்ந்த உத்தம ஸ்திரீ என்பதை முதல் பார்வையிலேயே வெளிப்படுத்தின. அந்த அம்மாள் தனது கையில், சிவப்பு சகலாத்தினால் ஆன மடிசஞ்சி மூட்டை ஒன்றும், பைராகிகள் வைத்திருக்கும் பித்தளைச் செம்பொன்றும் வைத்திருந்தாள். அவை நிற்க, அவளது கையில் மிளகுப் பருமனுள்ள ருத்திராக்ஷங்கள் கோர்க்கப்பட்ட ஜெபமாலை ஒன்றும் காணப்பட்டது. அந்த அம்மாளினது மொத்தத் தோற்றம், அவள் ஒரு பணக்கார சைவ மிராசுதார் வீட்டு எஜமானியான விதவை என்ற எண்ணத்தை உண்டாக்கியது. அவ்வித ஆடையாபரண லட்சணங்களோடு வந்து உட்கார்ந்து கொண்ட வயோதிக ஸ்திரீ பக்கத்தில் அன்னிய புருஷர்கள் இருந்ததைக்