பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

மாயா விநோதப் பரதேசி

விற்கே போய்ச் சேர்ந்து தனது திருவிளையாடல்களைத் துவக்கிக் கொண்டாள். ஆனால் அவளது தந்தையோ அதற்கு மேல் தமது மனைவியோடு கூட இருக்க எண்ணாமல் தாம் இருந்த சோபாவிலேயே படுத்து உறங்க ஆரம்பித்தார். அவரது மனைவிக்கு அப்போதும் தூக்கம் பிடியாமல் இருந்தது ஆகையாலும்; தன்னோடு பேச யாருமில்லை ஆதலாலும், சும்மா இருந்தது அவளால் சகிக்க இயலாத வேதனையாக இருந்தது. ஆகவே அவள், தனக்கெதிரில் ஜெபம் செய்தபடி உட்கார்ந்திருந்த விதவை யம்மாளை நோக்கி, "அம்மா! நீங்கள் எந்த ஊருக்குப் போகிறவர்கள்?" என்று நயமாகவும் சிநேகபாவமாகவும் வினவினாள்.

அப்போதே தூக்கத்தில் இருந்து விழிப்பவள் போல, அந்த அம்மாள் திடுக்கிட்டு தனது ஜெபத்தில் சென்று லயித்துப் போயிருந்த தனது கவனத்தைத் திருப்பி, "என்ன அம்மா? என்னையா கேட்கிறீர்கள்?" என்று மிகுந்த வாஞ்சையோடு வினவ, உடனே ரமாமணியின் தாய், "ஆமம்மா! உங்களைத் தான் கேட்கிறேன்" என்று மரியாதையாக மறுமொழி கூறினாள். விதவையம்மாள் "நான் பட்டணத்திற்குப் போகிறேன் அம்மா!" என்றாள்.

அந்த அம்மாளின் பெருந்தன்மையையும் இனிமையும் பணிவுமான நடத்தையையும் கண்டு, அவளிடம் ஒருவித அன்பும் இளக்கமும் கொண்டு, மேலும் அவளோடு பேச்சுக் கொடுக்க வேண்டும் என்ற தடுக்க முடியாத ஒருவித வேட்கையினால் தூண்டப்பட்டு, "ஓகோ! அப்படியா! வண்டி பட்டணம் போகும் போது பொழுது விடிந்து போகுமே. அதுவரையில் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தால், உடம்பு கெட்டுப் போகாதா? அப்படியே கொஞ்சம் படுத்துத் தூங்குகிறதுதானே. நாங்களும் பட்டணத்திற்குத்தான் போகிறோம். இங்கே வேறே யாரும் வராமல் நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம்" என்று அன்பொழுகக் கூறினாள். விதவையம்மாள் அன்பாகப் புன்னகை செய்து, "பரஸ்தலத்திற்குப் போனால் எனக்குத் தூக்கமே பிடிக்கிறதில்லை. என்னுடைய ஜாகையில் இருந்தால்தான் எனக்குச் சரியானபடி தூக்கம் வருகிறது வழக்கம். அல்லது வேறே எங்கே