பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

மாயா விநோதப் பரதேசி

நல்லோர் இணக்கம் ஆகிய இரண்டும் இம்மையிலும் பயன் தருவதோடு, மறுமைக்கும் உதவக்கூடிய மெய்ப்பொருளாக இருக்கின்றன என்பதை நான் நிதரிசனமாகக் காண்கிறேன். எனக்குப் பிள்ளை குட்டிகள் பிறந்திருந்தால், அவரிடத்தில் உள்ள பாசமும், சொத்துக்கள் பிறரிடம் போகாமல் நம்மிடமே இருந்து மனசைக் கவருவதான சொந்தமும் ஒன்று கூடி என்னை இப்படிப் பட்ட பரிசுத்தமான மார்க்கத்திலே விட்டிரா. எங்களுக்குப் புத்திர சந்தானம் இல்லாமல் போனதும் ஒரு பெருத்த நன்மைதான் என்று நான் இப்போது உறுதியாக எண்ணிவிட்டேன்.

ர. தாய்:- ஐயோ பாவம்! உங்களுடைய வரலாற்றை ஏன் கேட்டோம் என்று இருக்கிறது. எப்பேர்ப்பட்ட அபார சம்பத்தி லிருந்த உங்களுக்கு எப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருக்கிறது! உங்களைப் போல சகலமான செல்வத்தையும் முன் பின் தெரியாத அயலாரிடம் மனதார ஒப்புவிக்க வேறே யாருக்கு மனம் வரும்? நீங்கள் மேலான மனப்போக்கு உடையவர்களாக இருக்கிறீர்கள். கடவுள் இனி உங்களுக்கு ஒரு குறைவையும் வைக்கமாட்டார். ஆகா! சகலமான சொத்துகளையும் தாயாதிகளிடம் நீங்களே ஒப்பு வித்து விட்டதாகச் சொல்லுகிறீர்களே. உங்களுடைய வழிச் செலவிற்கும், உங்கள் ஆயிசு கால பரியந்தம் ஜீவனம் நடப்பதற்கும் நீங்கள் ஒன்றையும் வைத்துக் கொள்ளவில்லையா?

விதவையம்மாள்:- என் செலவிற்கு அவர்கள் மாதம் ஒன்றுக்கு நூறு ரூபாய் கொடுக்கிறதென்ற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாசம் ஒரு தரம் எந்த ஊரில் இருந்து கேட்டாலும், அவர்கள் அதை அனுப்பி விடுவார்கள். அதுவுமன்றி, என் எஜமானர் இறந்த காலத்தில், என் உடம்பில் ஐந்து லட்சம் ரூபாய் பெறுமானமுடைய நகைகள் இருந்தன. அவைகளை எல்லாம் நான் என்னுடைய பிரியப்படி உபயோகப்படுத்திக் கொள்ள எனக்கு அதிகாரம் உண்டென்று சொன்னார்கள். ஆகையால் நான் அவை களை விற்றுப் பணமாக்கி, எனக்குப் பழக்கமான ஒரு செட்டியாருடைய கடையில் வட்டிக்குப் போட்டிருக்கிறேன். நான் எந்த நிமிஷத்தில் போய்க் கேட்டாலும் அந்தத் தொகையை அவர் கொடுத்து விடுவார்.