பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

மாயா விநோதப் பரதேசி

இவ்வாறு அவர்கள் இருவரும் சம்பாவித்துக் கொண்டிருந்ததை ரமாமணியம்மாளும், அவளது தந்தையும், பக்கிரியா பிள்ளையும் கவனித்துக் கேட்டனர் ஆதலால், நீலலோசனியம்மாளது வரலாறு அவர்களுக்கும் சுவாரஸ்யமாகத் தோன்றியது. நீலலோசனியம்மாள் தான் சேர்த்து வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாயையும் கும்ப கோணத்திற்கு வரவழைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், தன்னை வைத்து அன்பாக சவரகூரிக்கிறவருக்கு அதைக் கொடுத்து விட உத்தேசிப்பதாயும் நீலலோசனியம்மாள் கூறியதைக் கேட்ட ரமாமணியம்மாளின் மனத்தில் உடனே ஒரு வஞ்சக நினைவு தோன்றியது. அந்த அம்மாளை உபசரித்துத் தனது வீட்டிற்கு அழைத்து கொண்டு போய் இரண்டொரு மாதகாலம் வைத்திருந்து, அவளிடம் தாம் அளவற்ற வாஞ்சை வைத்திருப்பதாகப் பாசாங்கு செய்து, அவளுக்குத் தினம் தினம் விருந்தளித்து அவளது மனத்தையும் பிரியத்தையும் முற்றிலும் கவர்ந்து அவளிடம் உள்ள ஐந்து லட்சம் ரூபாயையும் தாம் அபகரித்துக் கொண்டு அவளை வீட்டை விட்டுத் துரத்திவிட வேண்டுமென்ற கள்ள நினைவு ரமாமணியம்மாளது மனத்தில் உண்டாகி விட்டது. நீலலோசனியம்மாள் ஐந்து லட்சம் ரூபாயைத் தங்களுக்குக் கொடுத்து விட விரும்பாவிட்டாலும், அவள் கும்பகோணத்திற்குப் போனவுடன் எப்படியும் அந்தத் தொகையை நீர்மேல்குமிழி செட்டியாரிடத்தில் இருந்து வர வழைத்துத் தன் கையில் வைத்துக் கொள்ளும்படி செய்து, அவளுக்கு விஷமிட்டு அவளைக் கொன்றாவது, அந்தச் சொத்தை அபகரித்துவிட வேண்டும் என்ற நினைவு உண்டாகி விட்டது. தான் மாசிலாமணிக்கு வைப்பாட்டியாக இருந்து, அவன் செய்யும் சதியாலோசனைக் கெல்லாம் துணைக்கருவியாக உதவி, அவன் பேரில் தான் உயிரை வைத்திருப்பதாக நடித்துச் சாகசங்கள் செய்தும், தான் அவனிடம் சுமார் ஒரு லட்சத்திற்கு மேல் எதிர்பார்க்க முடியாதென்று அவள் எண்ணினாள் ஆதலால், அதைக் காட்டிலும் ஐந்து பங்கு பெரியதான அபாரசம்பத்து தனக்கு எவ்வித பிரயாசையும் இன்றி சுலபத்தில் கிடைத்துவிடும் என்ற எண்ணம் தோன்றத் தோன்ற, தான் அதோடு மாசிலா மணியின் சம்பந்தத்தை விலக்கிவிட்டு, அந்த நீலலோசனி