பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

263

யம்மாளிடம் உள்ள சொத்தை அபகரிப்பதிலேயே தன் பொழுதையும் கவனத்தையும் செலுத்தலாமா என்ற யோசனை தோன்றியது ஆனாலும், அடுத்த நிமிஷம் அவளது மனம் வேறுவிதமாக நினைத்தது. அவ்வளவு காலம் வரையில் தான் மாசிலாமணிக்கு உழைத்து விட்டு, தன் உத்தேசப்படி அவனிடம் ஒரு லட்சம் ரூபாயாவது அபகரிக்காமல் அவனை விட்டு விலகுவது சரியல்ல என்ற எண்ணம் உண்டாயிற்று. ஆகவே, அவன் தனக்கு இட்ட அலுவலைச் சென்னையில் முடித்துவிட்டு, அவனிடம் சென்று ஒரு லட்சம் ரூபாய் அதற்காக சன்மானம் பெற்றுக்கொண்டு அதோடு அவனது தொடர்பை விலக்கிவிட வேண்டும் என்று அவள் முடிவு செய்ததோடு தான் அந்த நிமிஷம் முதல் முயன்று தன்னாலான வரையில் சாகசம் செய்து நீலலோசனியம்மாளது நட்பையும் பிரியத்தையும் சம்பாதிப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும் என்ற உறுதியான தீர்மானத்தையும் செய்து கொண்டாள். அவள் தனது கருத்தை உடனே பக்கிரியா பிள்ளைக்குச் சுருக்கமாகக் கூறியதன்றி, அவனிடம் தனக்கு ஏற்பட்ட அபாரமான மோக வேட்கையை அவ்வளவோடு அடக்கிக் கொண்டாள். மாசிலா மணியிடத்தில் இருந்து தனக்குக் கிடைக்கப்போகும் லட்சம் ரூபாயோடு நீலலோசனியம்மாளின் ஐந்து லட்சம் ரூபாயும் சேர்ந்து ஆறு லட்சமாக வந்து சேர்ந்தவுடனே, தானும் பக்கிரியா பிள்ளையும் அது வரையில் இருந்ததை விடப் பதினாயிரம் மடங்கு வட்டியும் முதலுமாக அதிகரித்த வாஞ்சையும் பிரேமையும் காட்டி, எவரது ஆதங்கமுமின்றி இந்திரன் இந்திராணி போல இருக்கலாம் என்று அவள் மனக்கோட்டை கட்டி அதன் சாரத்தை அவனிடம் ரகசியமாகக் கூறவே, தவில் அடிப்பதைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் எள்ளளவும் சுய அறிவற்றவனாய் இருந்த பக்கிரியா பிள்ளை எந்த விஷயத்திலும் அவளது இச்சைப்படி நடந்து கொள்ள ஆயத்தமாக இருந்தான். தான் என்றைக்கும் எதிர்பார்க்க இயலாததும், அவளால் தனக்குக் கிடைப்பதுமான போக போக்கியங்களைக் கருதி, அவன் மாசிலாமணி, நீலலோசனியம்மாள் முதலிய எவரை வேண்டுமானாலும் கொல்வதற்கும் இணங்குபவனாய் இருந்தான்.