பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

265

என்று நினைத்து, கோமுட்டி கோவிலில் பால் வார்த்த கதை போல நடந்து கொள்வது உலக வழக்கமல்லவா. அது போல, இவர்கள் நம்முடைய ஊருக்கே விருந்தாளி என்றால், இவர்களுக்கு உபவாசம் தான் மிஞ்சும். ஆகையால், அப்படிச் சொல்ல வேண்டாம். இவர்கள் நம்முடைய விருந்தாளி என்று சொல்வதற்குத் தடையென்ன? இப்படிப்பட்ட தக்க மனுஷ்யாளை உப சரிப்பதற்கு வேண்டிய யோக்கியதையும் செல்வமும் நம்மிடம் இல்லையா? ஏன் யோசனை செய்கிறீர்கள்?" என்று தனது தாயைப் பார்த்துப் பெருந்தன்மையாகவும் ஹாஸ்யமாகக் கடிந்தும் கூறினாள். உடனே அவளது தாய், "இல்லையம்மா! ஆயிரந்தான் நீ என் மகளாக இருந்தாலும், எனக்கு என்ன அதிகாரமிருக்கிறது. எல்லாம் உன்னுடைய சொத்து; உன்னுடைய இஷ்டத்தைத் தெரிந்து கொள்ளாமல், நான் வாக்குக் கொடுத்துவிட்டு, பிற்கு அவமானப்படுவது நல்லதல்ல என்று நினைத்து நான் இவர்களுக்குப் பிடிகொடாமல் இருந்தேன். இவர்களுடைய வரலாற்றையும், கண்ணியமான யோக்கியதையையும் கேள் வியுற்ற உடனே, இவர்களுக்கு நம்மாலான உதவியை எல்லாம் செய்ய வேண்டும் என்ற ஆசை என் மனசில் உண்டாயிற்று. ஆனாலும், நான் சுய அதிகாரியல்ல ஆகையால், உன்னிடம் கலந்து பேசி முடிவைத் தெரிவிக்கலாம் என்று இருந்தேன். அதற்குள் நீயே தண்ணீர் குடிக்க வந்து இந்தப் பிரஸ்தாபத்தை எடுத்தாய். இவர்கள் என்னிடம் சொன்ன வரலாற்றை எல்லாம் நீ கேட்டுக் கொண்டிருந்தாய் அல்லவா?" என்றாள்.

உடனே ரமாமணியம்மாள் தனது தாயின் பக்கத்தில் உட்கார்ந்த படி, "இல்லையே! நான் தூங்கி விழுந்து கொண்டே இருந்தேன். நீங்கள் பேசிய சப்தமே எனக்குக் கேட்கவில்லையே. நம்முடைய வீட்டுக்கு வரும் மனிதர்களுக்கு நாம் தக்கபடி உபசரணை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய பிரியமன்றி, அவர்களுடைய வரலாற்றை எல்லாம் கேட்டு, அதன்பிறகுதான் அவர்களிடம் மரியாதை வைக்க வேண்டும் என்பது ஒழுங்கான காரியமல்ல. உங்களுக்கு யார் பேரில் பிரியமும், மரியாதையும் ஏற்படுகின்றனவோ, அவர் களிடம் எனக்கும் பிரியமும் மரியாதையும் ஏற்பட்டுவிடும் என்பது நிச்சயம்" என்றாள்.