பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

மாயா விநோதப் பரதேசி

நீலலோசனியம்மாள், "இல்லை குழந்தாய்! எனக்கு இனி வேறே ஊர் எதுவுமில்லை. நான் இனி என் ஆயிசுகால பரியந்தம் உங்கள் ஊரான கும்பகோணத்தில் தான் இருக்கப் போகிறேன். நீங்கள் தான் எனக்கு ஒரு நல்ல ஜாகை அமர்த்திக் கொடுக்க வேண்டும். சமையல் முதலிய என்னுடைய குற்றேவல்களைச் செய்ய, ஒரு வேலைக்காரி மாத்திரம் தேவை, நான் வளர்த்துக் கொள்ளும் குழந்தை என்னை, அம்மா! அம்மா! என்று வாஞ்சையோடு அழைத்து, ஒரு நாளில் ஒரு நாழிகை காலமாவது என்னோடு இருந்து, நான் கொடுக்கும் பகூடின பலகாரங்களைத் தின்று சந்தோஷமாக என்னோடு பேசிவிட்டுப் போகவேண்டும். நான் அடிக்கடி கொடுக்கும் ஆடையாபரணங்களை வாங்கி அணிந்து கொண்டு, அந்த அலங்காரத்தை நான் கண்டு சந்தோஷம் அடையும்படி செய்ய வேண்டும். மற்ற வேளைகளில் அது தன்னுடைய சொந்த தாய் தகப்பன்மாரிடம் இருக்கலாம்" என்றாள். ரமாமணி "அம்மா! நீங்கள் வேறே எங்கேயும் ஜாகை பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. எங்களுடைய வீடு இரண்டு கட்டுகள் உடைய பெரிய மெத்தை வீடு. அதில் இரண்டாங்கட்டு கொஞ்சமும் உபயோகிக்கப்படாமல் அப்படியே காலியாக இருக்கிறது. உங்களுக்கு அது நிரம்பவும் செளகரியமாக இருக்கும். நீங்கள் அதையே உங்கள் ஜாகையாக வைத்துக் கொள்ளுங்கள். மற்றபடி நீங்கள் அங்கே வந்த பிறகு உங்களுடைய அன்பும் அபிமானமும் தானாக யார் மேல் உண்டாகின்றனவோ, அவரை நீங்கள் அபிமானக் குழந்தையாக வைத்துக் கொள்ளலாம். ஒருவரிடத்தொருவருக்கு உண்மையான வாஞ்சை இருக்குமானால், அதை நடத்தையில் காட்டி மெய்ப்பிக்க வேண்டுமன்றி, வாயால் சொல்லித் திருப்தி செய்வது சாத்தியமான காரியமல்ல" என்றாள்.

நீலலோசனியம்மாள் மிகுந்த சந்தோஷமும் முகமலர்ச்சியும் காட்டி, "குழந்தாய்! நீ சொன்ன வார்த்தை அக்ஷர லட்சம் பொன் பெறக்கூடிய வார்த்தை. நான் வந்து உங்கள் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு யாதொரு அசெளகரியமும் ஏற்படாது என்பதை நீங்கள் உறுதியாக வைத்துக் கொள்ளலாம். நான் இப்படி ஊருராய்