பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

மாயா விநோதப் பரதேசி

போய்த்தான் வரவேண்டும் என்று நீல லோசனியம்மாள் சொல்லும் பட்சத்தில், தாமும் அந்த ஸ்தலங்களைப் பார்க்க விரும்புவதாகச் சொல்லி, அவளோடு கூடவே தொடர்ந்து போய், அவளது மனதை அடியோடு கவர்ந்து, எப்படியும் அவளைக் கும்பகோணத்திற்கு அழைத்துக் கொண்டு போய்விட வேண்டும் என்று அவர்கள் உறுதியான முடிவு செய்து கொண்டனர்.

அந்த நிலைமையில் ரயில் வண்டி சென்னையை அடைந்து எழும்பூர் ஸ்டேஷனில் வந்து நின்றது. எல்லோரும் தத்தம் சாமான் களை எடுத்துக் கொண்டு வண்டியை விட்டுக் கீழே இறங்கினார்கள். இடும்பன் சேர்வைகாரனும், போயியும் தமது வசத்தில் இருந்த பெட்டி பேழைகளை எல்லாம் கீழே இறக்கினார்கள். உடனே மூன்று குதிரை வண்டிகள் அமர்த்தப்பட்டன. பெண்டீர் மூவரும் ஒரு வண்டியிலும், பக்கிரியா பிள்ளை, இடும்பன் சேர்வைகாரன், போயி, ரமாமணியின் தகப்பனார் ஆகிய நால்வரும் ஒரு வண்டியிலுமாக உட்கார்ந்து கொண்டனர். அவர்களது பாத்திரம் படுக்கை முதலிய சாமான்கள் எல்லாம் மூன்றாவது வண்டியில் வைக்கப்பட்டன. மூன்று வண்டிகளும் அரை நாழிகை காலத்தில் சர் சவலை இராமசாமி முதலியாரது சத்திரத்தை அடைந்தன. அவ்வாறு வண்டிகள் எழும்பூரில் இருந்து சத்திரத்திற்கு வந்த காலத்தில் எவ்வித விசேஷ சம்பவமும் நிகழவில்லை ஆனாலும், ரமாமணியின் தந்தை இடும்பன் சேர்வைகாரனுடன் லோகாபிரம மாய்ப் பேசத் தொடங்கி ரயில் வந்த காலத்தில் நீலலோசனியம்மாள், பக்கிரியா பிள்ளை ஆகிய இருவருக்கும், தமக்கும் பரிச்சயமாயிற்று என்றும், அவர்கள் பட்டணம் பார்க்க வந்திருக்கிறார்கள் என்றும், அவர்களும் தம்மோடு கூடவே சனிக்கிழமை அன்று திரும்பி கும்பகோணத்திற்கு வரப்போகிறார்கள் என்றும் சொல்லி வைத்தார். இடும்பன் சேர்வைகாரன் அதற்கு முன் நமது பக்கிரியா பிள்ளையைப் பார்த்தவனே அன்று ஆதலின், அந்த வரலாற்றை எல்லாம் அவன் உண்மை என்றே நம்பினான். அவர்களது வேலைக்காரனான போயியும் அந்த வரலாற்றை நிஜம் என்றே எண்ணினான். ரமாமணியின் புருஷரான குடிகார வக்கீல் உயிரோடிருந்த காலத்தில் இருந்தே அந்தப் போயி அவர்களது வீட்டு வாசலில் காவல் இருந்து அவர்களது குற்றேவல்களைச்