பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

மாயா விநோதப் பரதேசி

வைத்துக் கொண்டான். அதுவுமன்றி, அவள் கும்பகோணத்தில் ரமாமணியம்மாளின் வீட்டில் வந்து வசிக்கப் போகிறாள் என்று மாத்திரம் அவன் தெரிந்து கொண்டிருந்தானே அன்றி, ரமாமணியம்மாள் அவளுக்கு அபிமான புத்திரிபோல நடித்து, அவளிடம் உள்ள ஐந்து லட்சம் ரூபாயை அபகரித்துக் கொண்டு அவளை ஒழிக்கக் கருதுகிறாள் என்பதையும் பக்கிரியா பிள்ளை அறியான். ஆனாலும், அவனும் திருவொற்றியூருக்குப் போக வேண்டும் என்று அவனிடம் ரகசியத்தில் ரமாமணியம்மாள் சொன்ன காலத்தில், அவன் தங்களுடைய குடும்ப ரகசியம் எதையும் வெளியிடாமல் நீலலோசனியம்மாளிடம் நிரம்பவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி அவனை எச்சரித்திருந்தாள். ஆகவே அவன் தானாகவே எதையும் நீலலோசனியம் மாளிடம் தெரிவிக்காமல், அவள் கேட்பதற்கு மாத்திரம் சுருக்கமாக மறுமொழி கொடுத்துக் கொண்டே போனான்.

அவர்கள் இருவரும் வண்டியில் உட்கார்ந்து திருவொற்றியூர் போய்ச் சேருகிற வரையில் அவர்களுக்குள் அதிகமான சம்பாஷணை எதுவும் நடக்கவில்லை. நீலலோசனியம்மாள் மிகுந்த ஈசுவர பக்தியுடையவள் ஆதலால், அவள் அநாவசியமான வார்த்தைகளில் தனது அரிய பொழுதைச் செலவிடாமல், சதாகாலமும் தனது ஜெபமாலையை வைத்து இஷ்ட தெய்வ ஜெபம் செய்தபடியே பெரும்போக்காக இருந்தாள். வண்டி திருவொற்றியூரை அடைந்தவுடன், தாம் திரும்பி வருவதற்கும் அதே வண்டியை அமர்த்தியிருந்தார்கள் ஆதலால், வண்டிக்காரன் வண்டியைச் செளகரியமான ஓரிடத்தில் அவிழ்த்துவிட்டு, குதிரைக்குத் தேவையான புல், கொள் முதலியவற்றை உதவி, தானும் தனது போஜனம் முதலியவற்றைச் செய்து கொண்டு ஒரு திண்ணையில் படுத்திருந்தான்.

நீலலோசனியம்மாள் பக்கிரியா பிள்ளையைத் தனது சொந்த மகனைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சிரேஷ்டமான அருமை மகன் போல அபாரமான வாஞ்சையோடும் பிரேமையோடும் மரியாதையோடும் நடத்தி, தன்னோடு கூடவே அவனையும் கோவிலுக்கு அழைத்துப் போய் சுவாமி தரிசனம் செய்வித்து