பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

மாயா விநோதப் பரதேசி

அம்மாள் சொன்னதைக் கேட்டவுடனே பக்கிரியா பிள்ளை, “இல்லையம்மா! நான் பகலில் படுக்கிறதும் இல்லை. படுத்தாலும் தூக்கம் வராது. இப்படியே சும்மா உட்கார்ந்திருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் அப்படியே படுத்துக் கொள்ளுங்கள்” என்று அன்போடு கூறினான். நீலலோசனியம்மாள், “என் சுபாவமும் அப்படிப்பட்டதுதான். நானும் படுக்கிறதுமில்லை. படுத்தாலும், தூக்கம் பிடிக்கிறதே இல்லை. ஆனாலும், நாம் வெயில் தணிகிற வரையில் இங்கே இருந்து பிறகு புறப்பட்டுப் போவோம்” என்றாள்.

உடனே பக்கிரியா பிள்ளை, “ஏனம்மா நீங்கள் கையில் மோதிரங்கள் போட்டிருக்கிறீர்களே, அவைகளில் இருப்பது புஷ்பராகக் கல்தானே? ஒவ்வொரு மோதிரமும் என்ன விலை?” என்றான்.

நீலலோசனியம்மாள் தனது பவித்திர விரலில் இருந்த மோதிரத்தை நிரம்பவும் பிரியத்தோடு கழற்றி அதை அவனிடம் கொடுத்த வண்ணம், “இந்த மோதிரம் ஒவ்வொன்றும் இரண்டாயிரம் ரூபாய் விலை. கல்கள் எல்லாம் வைரக்கல்கள். என் புருஷர் போட்டிருந்த இந்த இரண்டு மோதிரங்களை மாத்திரம் விற்காமல் அவருடைய ஞாபகத்திற்காக நான் வைத்திருக்கிறேன். இந்த மோதிரத்தை நீ உன் கை விரவில் போட்டுப் பார்” என்றாள்.

அவைகளின் அபாரமான விலையைக் கேட்டவுடனே பக்கிரியா பிள்ளை அளவற்ற ஆச்சரியம் அடைந்தவனாய், அந்த மோதிரத்தை மரியாதையாக வாங்கித் தனது சுண்டு விரலில் போட்டுப் பார்க்க, அது அந்த விரலிற்குப் பொருத்தமாக இருந்ததோடு, அதனால் கையின் அழகும் பன்மடங்கு அதிகரித்துத் தோன்றியது. அதைக் காண அவனது மனம் மட்டற்ற மகிழ்ச்சியை அடைந்தது. அவனது முகம் புன்னகையால் மலர்ந்தது. ஆயினும், அவன் அவ்வளவோடு திருப்தி அடைந்து அதை நீலலோசனியம்மாளிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற கருத்தோடு கழற்ற எத்தனித்தான். அதைக் கண்ட அந்த அம்மாள், “தம்பி கழற்றாதே. மோதிரம் உன் கையிலேயே இருக்கட்டும். அது விதவையான என் கையில் இருப்பதைவிட உன் கையில்