பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

287

களுடைய வேலைக்காரர் அல்ல என்பது நன்றாகத் தெரிகிறது. நீங்கள் கோரி வந்திருக்கும் காரியம் ஒருவேளை அவருக்குச் சம்பந்தப்பட்டதாக இருக்கும் போலிருக்கிறது" என்றாள்.

பக்கிரியா பிள்ளை, “எங்கள் ஊரில் மாசிலாமணிப் பிள்ளை என்று ஒரு தனவந்தர் இருக்கிறார். அவருடைய வேலைக்காரர் இவர். அந்த மாசிலாமணிப் பிள்ளையின் விரோதிகள் சிலர் இந்த ஊரில் உள்ள ஒரு பெரிய மனிதர் வீட்டுப் பெண்ணைக் கொள்வதாக ஏற்பாடு செய்து நாளைய தினம் நிச்சயதாம்பூலம் மாற்ற வருகிறார்களாம். அது சம்பந்தமாக அந்த மாசிலாமணிப் பிள்ளை இந்தச் சேர்வைகாரரை முதலில் அனுப்பி இருக்கிறார். இவருடைய ஆட்கள் சுமார் இருபது பேர் நாளைய தினம் இரவில் வந்து சேருவார்களாம். அவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ அது எங்களுக்குத் தெரியாது. அதில் எங்களுக்கு யாதொரு சம்பந்தமும் இல்லை. ஆனால், அந்த மாசிலாமணிப் பிள்ளையின் எதிரிகளில் சிலருடைய அடையாளம் இந்தச் சேர்வைகாரருக்குத் தெரியாதாம். நம்முடைய ரமாமணியம்மாள் அவர்கள் இன்னார் இன்னார் என்று இந்தச் சேர்வைகாரருக்குக் காட்டப் போகிறாள். அதுதான் நாளைய தினம் நாங்கள் செய்ய வேண்டிய வேலை. அது முடிந்தவுடன் நாம் புறப்பட்டு விடலாம். அதன் பிறகு சேர்வைகாரரும் அவருடைய ஆட்களும் என்ன செய்யப் போகிறார்களோ அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை” என்றான்.

அதைக் கேட்ட நீலலோசனியம்மாள், “ஓகோ! அப்படியா? உலகத்தில் ஆயிரம் விவகாரங்கள் இருக்கும். அதை எல்லாம் நாம் ஏன் காதில் வாங்கி மனசைப் பல வழியில் அலட்டிக் கொள்ள வேண்டும். அது எப்படியாவது இருக்கட்டும். முக்கியமாக எனக்குத் தெரிய வேண்டியது ஒரே ஒரு விஷயம். நீங்கள் எவ்வித மானகெட்ட காரியத்திலும் இறங்காத யோக்கியமான மனிதர்கள் என்பதொன்று மாத்திரம் என் மனசுக்கு உறுதியாகத் தெரிந்தால், அதுவே போதுமானது” என்றாள்.

பக்கிரியா பிள்ளை, “நாங்கள் ஒரு நாளும் கெட்ட வழியில் போகிறவர்கள் அல்ல. அதுவுமன்றி இந்தச் சேர்வைகாரரும் எதிரிகளுக்கு அதிக கெடுதல் எதுவும் செய்ய உத்தேசிக்கிறதாகத்