பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

மாயா விநோதப் பரதேசி

சன்மானம் செய்யச் சொன்னார்; அது மாத்திரம் அல்ல, இன்னம் மிகுதி இருக்கும் காரியத்தையும் நீர் திருப்திகரமாக முடித்து வைத்தால், நம்முடைய சுக்காம்பாளையத் தெருவில் உள்ள வீட்டையும், இரண்டு வேலி நிலத்தையும் உமக்கு எழுதி வைத்து விடும்படி என்னிடம் சொன்னார். இப்போது அவர் உமக்குக் கொடுக்கச் சொன்ன பதினாயிரம் ரூபாயை நான் உமக்கு எப்போது கொடுக்கப் போகிறேன் தெரியுமா? நாளைய தினம் எனக்கும் இந்த மனோன்மணிக்கும் கலியாணம் நடக்கும் காலத்தில், அவளை எனக்கு நீர்தான் கன்னிகாதானம் செய்கிறவர் என்று சொல்லி அந்தச் சமயத்தில் பணத்தை, வஸ்திரம் முதலிய மற்ற மரியாதைகளோடு, உமக்கு வழங்கப் போகிறேன்.

இடும்பன் சேர்வைகாரன்:- (நிரம்பவும் மகிழ்ச்சி அடைந்தவனாய்) அடேயப்பா! எனக்கு எவ்வளவு பெரிய மரியாதை உங்களிடம் பொருளையாவது வேறு எவ்விதமான சன்மானத்தையாவது நாடி நான் உங்களுக்கு இந்தக் காரியங்களைச் செய்யவில்லை. உங்களைப் போன்ற தக்க பெரிய மனிதர்களுடைய சிநேகம் ஒன்றையே நான் முக்கியமாக நாடியது. ஆனால், நாம் காலால் இடும் வேலையைத் தலையால் செய்து, உயிருக்குத் துணிந்து நின்று, நம்முடைய இஷ்டம் போல நடந்து கொள்ளும் நம்முடைய ஆள்களை மாத்திரம் நீங்கள் மறந்துவிடக் கூடாது. அவர்களுடைய உதவிதான் ஒப்பற்றது. அவர்கள் இல்லாவிட்டால், நம்மால் மாத்திரம் எந்தக் காரியமும் முடிந்திராது; இனியும் முடியாது. நாளைய தினம் நீங்கள் உங்களுடைய தமயனார் சொன்னபடி அவர்கள் எல்லோருக்கும் சன்மானம் வழங்குவது நிரம்பவும் முக்கியமான விஷயம். அதை மாத்திரம் நீங்கள் மறந்து விடக்கூடாது. என் விஷயம் எப்படியானாலும், அதைப்பற்றி நான் நினைக்கவே போகிறதில்லை.

மாசிலாமணி:- எங்களுக்கு ஒருவர் ஓர் அற்ப உதவி செய்தால் கூட அதை நாங்கள் ஒரு நாளும் மறக்கவே மாட்டோம். ஒன்றுக்குப் பத்தாக நாங்கள் அவருக்கு எப்படியும் சன்மானம் நடத்திவிடுவோம். அப்படி இருக்க, இப்படிப்பட்ட அரிய பெரிய காரியங்களில் நமக்குத் துணை இருக்கும் நம்முடைய ஆள்களை நாங்கள் மறந்து விடுவோமா? அல்லது உம்மைத்தான் நாங்கள்