பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

மாயா விநோதப் பரதேசி


12-வது அதிகாரம்
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கான விந்தை

னி நாம் மனோன்மணியம்மாளினது நிலைமையை ஆராய்வோம். சனிக்கிழமை அன்று தமது பங்களாவிற்கு வந்திருந்த கொடிமுல்லையம்மாளும், அவளது புருஷனும் உண்மையில், வேலாயுதம் பிள்ளையின் மைத்துனியும், அவளது புருஷனும் அல்லர் என்றும், அவர்கள் இருவரும் வேலாயுதம் பிள்ளையின் விரோதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் மனோன்மணியம்மாள் நிச்சயித்துக் கொண்டாள். ஆனாலும், கொடிமுல்லையம்மாள் கூறிய சொற்கள் யாவும் பசுமரத்தாணி போல மனோன்மணியம் மாளது மனத்தில் சுருக்கென்று பாய்ந்து, அவளது செவிகளை விட்டு அகலாமல் ஒலித்துக் கொண்டே இருந்தன. கொடி முல்லையம்மாள் இங்கிலீஷ் பாஷை யும் புதுநாகரிகமும் அறியாத பட்டிக்காட்டு மனுஷ என்ற எண்ணம் மனோன்மணியம்மாளின் மனதில் உறுதியாக ஏற்பட்டுப்போனது ஆனாலும், அவள் நிரம்பவும் கூர்மையான அறிவும், வியவகார ஞானமும் உள்ளவள் என்ற நினைவும், புது நாகரிகச் செய்கைகளைக் கண்டித்து அவள் நிரம்பவும் சாதுர்யமாகவே பேசினாள் என்ற நினைவும் தானாகவே மனோன்மணியம்மாளது மனதில் தோன்றி மறைந்து கொண்டே இருந்தன. ஸ்திரீகள் நாற்காலியில் உட்காருவதைப் பற்றியும், ஒருவரை ஒருவர் காணும்போது வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் முதலியவற்றைக் கொண்டு போய்க் கொடுப்பதைப் பற்றியும், அவைகளை உபயோகிப்பதைப் பற்றியும், ஸ்திரீகள் வெள்ளை உடை உடுத்துவதைப் பற்றியும், அன்னிய நாட்டு பிஸ்கோத்து முதலியவற்றை உண்பதைப் பற்றியும், எச்சில் கையைத் துணியால் துடைத்துக் கொண்டதைப் பற்றியும் கொடி முல்லையம்மாள் குத்திக் காட்டிய சொற்களை எல்லாம் மனோன்மணியம்மாள் அவ்வளவாகப் பொருட்படுத்தாமலும் பாராட்டாமலும் அலட்சியமாக விட்டுவிட்டாள். ஆனாலும், மன்னார்குடியார் சுத்த கர்னாடக மனிதர்கள் என்றும், தனது இங்கிலீஷ் படிப்பையும் தனது நடையுடை பாவனைகளையும் அவர்கள் வெறுப்பார்