பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302

மாயா விநோதப் பரதேசி

விஷயத்தை வேலாயுதம் பிள்ளையிடம் பிரஸ்தாபித்து, அந்தப் பெண்ணைக் கந்தசாமிக்கு மணம் புரிவிக்கலாம் என்று கூற, திகம்பரசாமியாரது சொல்லை வேதவாக்கியமாக மதித்து வந்த வேலாயுதம் பிள்ளை அவரது விருப்பத்திற்கு உடனே இணங்கிவிட்டார். வதுவரர்களின் ஜாதகங்களும் நன்றாகப் பொருந்தின. ஆகவே, திகம்பரசாமியார் பட்டாபிராம பிள்ளைக்கு எழுதி மனோன்மணியம்மாளைக் கந்தசாமிக்குக் கொடுத்துவிடும்படி முடிவாகக் கூறிவிட்டார். பட்டாபிராம பிள்ளை மன்னார்குடியில் இருந்த காலத்தில், அவர் வேலாயுதம் பிள்ளையைப் பற்றியும், அவரது சம்பந்தியான சுந்தரம் பிள்ளையைப் பற்றியும், அவர்களது குடும்பங்களைப் பற்றியும் நன்றாக அறிந்திருந்தார் ஆதலால், அவர்களது சம்பந்தம் தமக்கு வாய்க்கப் போவது தாமும் தமது முன்னோரும் பூர்வ ஜென்மங்களில் செய்த பூஜா பலனே என்று எண்ணி, அந்த ஏற்பாட்டை அவரும் உடனே ஏற்றுக் கொண்டு, நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறித்து எழுதிவிட்டார். அதன் பிறகு அவர் கோமளேசுவரன் பேட்டைக்குப் போய்க் கந்தசாமியை இரண்டொரு முறை பார்த்து அவனது ஒப்பற்ற அழகையும் குணச்சிறப்பையும் கண்டு மிகுந்த களிப்படைந்து திரும்பி வந்து அந்த விஷயத்தை மனோன்மணியம் மாளிடம் தெரிவித்திருந்தார். அதுவுமன்றி, வேலாயுதம் பிள்ளையும் அவரது குடும்பத்தாரும் பழைய ஆசார ஒழுக்கங் களை விடாமல் சன்மார்க்கத்தில் ஒழுகுகிறவர்கள் என்பதையும் அவர் மனோன்மணியம்மாளிடம் ஒருவாறு தெரிவித்து வைத்திருந்தார்.

அந்த மடந்தையோ இங்கிலீஷ் படிப்பில் பெரிய பட்டமும் புகழும் பெற வேண்டும் என்ற ஆசையும், மற்ற ஸ்திரீகளைப் போல அடிமை போல் இல்லாமல் தக்க யோக்கியதையோடு தனது புருஷனுக்குச் சமதையாக இருக்கும் நிலைமையை அடைய வேண்டும் என்ற மனப்போக்கும் உடையவளாய் இருந்தாள் என்பது முன்னரே சொல்லப்பட்டதல்லவா. அதுவுமன்றி, அவள் மேன்மேலும் இங்கிலீஷ் பாஷையைக் கற்றுக் கரைகாண ஆவல் கொண்டு, அந்த வேட்கைக்கே அடிமையாய் இருந்து வந்தாளன்றி, தான் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற