பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

மாயா விநோதப் பரதேசி

உணர்ந்து, கலக்கமடைந்து அவனைக் கண்டு பிடிப்பதற்கான முயற்சிகளைச் செய்ததும், கோபாலசாமியின் புகைப்படத்தைக் கொணர்ந்து வைத்து மன்னார்குடியாருக்குக் கடிதம் எழுதியதும், மனோன்மணியம்மாளது மனத்திற்குச் சம்மதியாக இருக்கவில்லை. ஆயினும், அவர் கந்தசாமிக்கே அவளை மணம் புரிவிக்க வேண்டும் என்ற மனவுறுதியோடு எல்லாக் காரியங்களையும் நடத்தினார் ஆதலால், தனது சொல்லை அவர் கேட்கமாட்டார் என்ற எண்ணத்தினால், அவள் அவரை நேருக்கு நேர் தடுக்காமல் மெளனமாகவே இருந்து சஞ்சலமடைந்து வந்தாள். அவளது மனம் அவள் பரீட்சைக்குப் படித்து வந்த பாடங்களில் செல்லாமல் தனது மனத்தை நிறுத்தும் விஷயத்திலேயே ஓயாமல் சென்று கொண்டிருந்ததன்றி, காணாமற் போன கந்தசாமி திரும்பாமல் அப்படியே காணாமலே போய்விட வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டபடி அவள் தனது பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தாள்.

அந்த நிலைமையில், செவ்வாய்க்கிழமை மாலையில் மன்னார் குடியில் இருந்து பட்டாபிராம பிள்ளைக்கு அவசரமான ஒரு தந்தி வந்தது. வேலாயுதம் பிள்ளை முதலிய எல்லோரும் அன்றைய இரவு வண்டியிலேயே புறப்பட்டு சென்னைக்கு வருவதாக அந்தத் தந்தியில் எழுதப் பட்டிருந்ததைப் படித்த பட்டாபிராம பிள்ளை அந்த விஷயத்தை உடனே தமது புதல்விக்குத் தெரிவித்து மிகுந்த அன்போடு, “அம்மா! அவர்கள் நாளைய தினம் அதிகாலையில் எழும்பூர் ஸ்டேஷனில் வந்திறங்குவார்கள். நான் போய் அவர்களை வரவேற்று சகலமான விஷயங்களையும் சவிஸ்தாரமாய் நேரில் சொல்லிவிட்டு, அவர்களைத் தக்கபடி உபசரிப்பது அவசியம் என்று நினைக்கிறேன்” என்றார்.

அதைக் கேட்ட மனோன்மணியம்மாளினது மனதில் ஒருவித யோசனை தோன்றியது. வேலாயுதம் பிள்ளையையும், அவரைச் சேர்ந்த மற்ற மனிதர்களையும் தான் நேரில் பார்த்து, அவர்களது குணம், நடத்தை முதலியவற்றைக் கவனித்துணர்ந்து, அவர்களிடம் பல குற்றங்களைக் கண்டுபிடித்தால், அவற்றை ஆதாரமாக வைத்துக் கொண்டு, தான் தனது தந்தையிடம் வாதாடி, அந்தச்