பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

மாயா விநோதப் பரதேசி

நிரம்பவும் கவனிப்பாக இருக்கக்கூடியவர்கள். ஆகையால், நீ அவர்களுக்கெதிரில் என்னோடு கூட ரயிலுக்கு வருவது அவர்களுடைய மனதிற்குப் பிடிக்காது. அவர்கள் நம்மைப்பற்றி இழிவான அபிப்பிராயம் கொள்வார்கள். ஆகையால், நீ வரவேண்டாம். நானே அவர்களுடைய குணாதிசயங்களை எல்லாம் நன்றாகத் தெரிந்து கொண்டு வந்து உன்னிடம் சொல்லுகிறேன். அது போதாதா?” என்றாள்.

மனோன்மணியம்மாள், “இல்லையப்பா எந்த விஷயத்தையும் ஒருவர் நேரில் பார்ப்பதற்கும், இன்னொருவர் சொல்லக் கேட்பதற்கும் வித்தியாசமில்லையா? அவர்களை எப்படியாவது நான் பார்த்துத் தான் தீரவேண்டும் என்ற ஓர் ஆசை உண்டாகிறது அகையால், நானும் வருகிறேன். வந்து, அவர்கள் என்னைப் பார்க்காதபடி தூரத்தில் மறைவாக நிற்கிறேன். நீங்கள் அவர்களுக்காக ஒரு பெரிய மோட்டார் வண்டி பேசி வையுங்கள். தூரத்தில் இருந்தபடியே அவர்களைப் பார்த்துவிட்டு நான் நம்முடைய வண்டியில் ஏறிக்கொண்டு நம்முடைய பங்களாவிற்கு வந்து விடுகிறேன். அவர்கள் இங்கே வர இனங்கினாலும், அல்லது, கோமளேசுவரன் பேட்டைக்கே போனாலும், நீங்களும் அவர்க ளோடு கூடவ்ே வாடகை வண்டியில் இங்கே வந்து விடுங்கள்; அல்லது அவர்களை கோமளேசுவரன் பேட்டையில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்துவிடுங்கள்” என்றாள்.

அதைக் கேட்ட பட்டாபிராம பிள்ளை சிறிது ஆழ்ந்து யோசனை செய்த பின் மனோன்மணியம்மாளின் விருப்பத்திற்கு இணங்கினார்.

மறுநாளாகிய புதன்கிழமை தந்தையும் புதல்வியும் அதிகாலை யில் எழுந்து தம்மை நன்றாக அலங்கரித்துக் கொண்டு தமது பெட்டி வண்டியில் ஏறி எழும்பூர் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தனர். தந்தை தமது பெரிய உத்தியோக பதவிக்குத் தகுந்தபடி விலை உயர்ந்த சட்டை, நிஜார், ஜரிகைத் தலைப்பாகை முதலிய உடைகளைத் தரித்து, வெள்ளைக்காரர் நாகரிகம், இந்திய நாகரிகம் ஆகிய இரண்டிலும் அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் அனுசரித்து நடக்கும் பெரிய மனித தோரணையில் வந்திருந்தார். மனோன்