பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

மாயா விநோதப் பரதேசி

பெரிய பாகங்களாய்ப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதலாவது, இரண்டாவது வகுப்புப் பிரயாணிகள் பிரத்தியேகமாக டிக்கெட்டுகள் வாங்கவும், உள்ளே போகவும், வெளியில் வரவும் ஒரு பாகம் உபயோகப்படுகிறது. மூன்றாவது வகுப்புப் பிரயாணிகள் தங்கவும், டிக்கெட்டுகள் வாங்கவும், உள்ளே போகவும், வெளியில் வரவும் இன்னொரு பாகம் உபயோகப்படுகிறது. அவை வெளிப்பக்கத்தில் ஒன்றிற்கொன்று சம்பந்தமில்லாமல் தூரமாக அமைந்திருக்கின்றன. உள்பக்கத்தில், அரை பர்லாங்கு நீளம், கருங்கல் பதிக்கப் பெற்ற பிளாட்டாரமும், கம்பங்கள் நிறைந்த தாழ்வாரமும், ஆங்காங்கு ஜனங்கள் உட்காருவதற்கு இரும்பு விசிப்பலகைகளும் இருக்கின்றன. நமது பட்டாபிராம பிள்ளையும், மனோன்மணியம்மாளும், முதல் இரண்டு வகுப்புப் பிரயாணிகள் உபயோகிக் கும் கட்டிடத்தின் வழியாக உள்ளே சென்றனர். தெற்கே இருந்து வண்டிகள் வந்து பிளாட்டாரத்தின் ஓரமாய் நிற்கும் காலத்தில், 3-வது வகுப்புப் பிரயாணிகள் உட்காரும் வண்டிகள் அந்த வகுப்புப் பிரயாணிகளுக்கு டிக்கெட்டு கொடுக்கப்படும் கட்டிடத் தண்டையிலும் முதல் இரண்டு வகுப்பு வண்டிகள் அந்த வகுப்புப் பிரயாணிகளுக்கு டிக்கெட்டு கொடுக்கப்படும் கட்டிடத்தண்டையிலும் நிற்பதற்குத் தோதாக அந்த இரண்டு கட்டிடங்களும் அமைந்திருக்கின்றன. நமது வேலாயுதம் பிள்ளை பெருத்த தனிகராதலால் அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் முதல் வகுப்பு வண்டியிலாவது, இரண்டாவது வகுப்பு வண்டியிலாவதுதான் உட்கார்ந்து வருவார்கள் என்று பட்டாபிராம பிள்ளை எண்ணினார் ஆதலாலும், உள்ளே நுழைந்த வழிக்கெதிரிலேயே மேற்படி வகுப்பு வண்டிகள் நிற்கும் ஆதலாலும், அவரும் மனோன்மணியம்மாளும் அதற்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த இரண்டு நாற்காலிகளின் மேல் உட்கார்ந்து வண்டியின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் பெருத்த பெருத்த கம்பங்கள் இருந்தமையால், வண்டி வரும்போது மனோன்மணியம்மாள் எழுந்து ஒரு கம்பத்திற்கு அப்பால் மறைந்து நின்று பார்ப்பதென்றும், வண்டியில் இருந்து நூற்றுக்கணக்கில் ஜனங்கள் இறங்கித் தாறுமாறாக அங்குமிங்கும் நிறைந்து போவார்கள்