பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

309

ஆதலால், மனோன்மணியம்மாளை வேலாயுதம் பிள்ளை வீட்டார் கவனிக்க ஏதுவிராதென்றும், அவர்கள் இருவரும் தமக்குள் பேசி முடிவு கட்டிக் கொண்டனர். அதன் பிறகு கால் நாழிகை காலத்தில் தெற்குத் திக்கிலிருந்து வண்டி வந்து சேர்ந்தது. தங்களுடைய ஏற்பாட்டின் படி மனோன்மணியம்மாள் எழுந்து தூர விலகி நின்றாள். பட்டாபிராம பிள்ளை நாற்காலியை விட்டெழுந்து தமக்கெதிரில் வந்து நின்ற முதல் இரண்டாவது வகுப்பு வண்டிகளை ஆராய்ச்சி செய்து கொண்டே பின் பக்கத்திலிருந்து முன் பக்கமாகப் போனார். அந்த ஸ்டேஷனே அந்த வண்டி முடிவாய்ப் போய் நிற்கும் இடம் ஆதலால், வண்டியில் வந்த எல்லா ஜனங்களும் ஒருவர் பாக்கி இல்லாமல், மூட்டை முடிச்சுகளோடு அவ்விடத்தில் இறங்கிவிட்டார்கள். அந்த ரயிலில் கோர்க்கப்பட்டிருந்த முதல் இரண்டாவது வகுப்பு வண்டிகள் அனைத்தையும் அவரது மனிதர்களும் மேற்படி வண்டிகளில் இருந்து இறங்கின மனிதருள் காணப்படவில்லை. ஆகவே, அவர் இன்னம் முன்னாகச் சென்று மூன்றாவது வகுப்பு வண்டிகளில் இருந்து இறங்கிய ஜனக் கும்பலைக் கவனித்துப் பார்த்துக் கொண்டே செல்ல, மூன்றாவது வகுப்பு வண்டி ஒன்றில் இருந்து வேலாயுதம் பிள்ளை, அவரது மனைவி, கண்ணப்பா, வடிவாம்பாள், ஒரு வேலைக்காரன், ஒரு வேலைக்காரி ஆகிய அறுவரும் இறங்கியது தெரிந்தது. இடுப்பில் வசீகரமாக நீர்க்காவியேற்றப்பட்ட துல்லியமான பட்டுக்கரை வேஷ்டிப் பஞ்ச கச்சம்; மேலே தும்பைப்பூவை ஒத்த உத்தரியம், விபூதி, உருத்திராக்ஷம் முதலிய அலங்காரங்களோடு காணப்பட்ட வேலாயுதம் பிள்ளையின் தேகம் பசுந் தங்கம் போலப் பழுத்து மினுமினுப்பாகக் காணப்பட்டது. அவரது முகத்தில் உருக்கமான தெய்வபக்தி, ஜீவகாருண்யம், தயாளம், நிஷ்கபடமான பரிசுத்தம், எப்போதும் ஜ்வலித்துக் கொண்டிருக்கும் மகா தீக்ஷண்யமான புத்திசாலித்தனம், மேலான ஞானம் முதலியவை நிறைந்த பிரம்ம தேஜஸ் வழிந்து கொண்டிருந்தது. சுருங்கச் சொல்லுமிடத்து தெய்வத்தின் கருணா கடாகவும் அவரிடத்தில் பரிபூர்ணமாக சான்னித்தியம் செய்து கொண்டிருந்தது ஆகையால், எத்தகைய மூர்க்க குணமுள்ள துஷ்டனும், கொடிய கொலை பாதகனும், மகா கோபியும் அவரைக் கண்டு அவரது முகத்தை ஒருமுறை