பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

மாயா விநோதப் பரதேசி

காலையில் ஆகாரம் பார்த்தேன். இங்கே பக்கத்தில் நல்ல வசதியான சைவாள் சாப்பாட்டுக் கடை ஏதாவது இருக்கிறதா என்பது எனக்குத் தெரிய வேண்டும். ஆனால், நீ குழந்தை; அதிலும் பெண்பிள்ளை; உனக்கு அந்தத் தகவல் தெரிய நியாயமில்லை, உன்னைச் சேர்ந்த ஆண்பிள்ளை யாராவது இங்கே உன்னோடு கூட வந்திருந்தால், அவர்களிடம் கேட்டுச் சொல்ல முடியுமா? நீ இவ்விடத்தில் தனியாக நிற்கிறாயே! எங்கேயாவது போயிருக்கும் உங்கள் மனிதர் யாரையாவது பார்த்துக் கொண்டு நிற்கிறாயா?” என்று மிகமிகப் பணிவாகக் கேட்க, அந்த அம்மாள் கேட்ட இளக்கமான மாதிரியைக் கண்டு, இரக்கங் கொண்ட மனோன்மணியம்மாள், “அம்மா! என் தகப்பனார் அதோ சில மனிதர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார். அவர் அநேகமாய் அவர்களோடு போய்விடுவார். நான் இன்னம் இரண்டொரு நிமிஷம் இருந்துவிட்டுப் புறப்பட்டு வெளியில் போகப் போகிறேன். என்னோடு நீங்களும் வாருங்கள். வாசலில் எங்கள் வீட்டு வண்டிக்காரன் இருக்கிறான். அவனை விட்டு விசாரித்து, உங்களுக்குச் சரியான தகவல் தெரிவிக்கச் செய்கிறேன்” என்றாள்.

கரூரில் இருந்து வந்த ஸ்திரீ மனோன்மணியம்மாள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு பட்டாபிராம பிள்ளை முதலியோர் நின்ற திக்கில் உடனே முகத்தைத் திருப்பிப் பார்த்து முற்றிலும் பிரமிப் படைந்தவளாய் அப்படியே இரண்டொரு நிமிஷம் நின்று மறுபடி மனோன்மணியம்மாளை நோக்கி, “அம்மா! அதோ சட்டை நிஜார் முதலிய உடுப்புகளோடு நிற்கிறார்களே, அவர்கள் தான் உன் தகப்பனாரா?” என்றாள்.

மனோன்மணியம்மாள்:- ஆம்; அவர்கள் தான்.

கரூர் ஸ்திரீ:- (மிகுந்த வியப்போடு) அவர்களுக்குப் பக்கத்தில் நிற்கிறார்களே, அவர்கள் எல்லோரும் உங்களுடைய பந்துக்களா அம்மா!

மனோன்மணியம்மாள்:- அவர்கள் எங்களுடைய பந்துக்கள் இல்லை. ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? அவர்களுக்கும் உங்களுக்கும் இதற்கு முன் பழக்கம் உண்டா?