பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

317


கரூர் ஸ்திரீ:- இல்லையம்மா! அவர்களை நான் பார்த்ததே இல்லை. ஆகா! இப்பேர்ப்பட்ட தெய்வாம்சம் பொருந்திய மனிதர்களும் இந்தக் கலிகாலத்தில் இருக்கிறார்களா? பெரியவர்கள் இருவரும் தத்ரூபம் பார்வதி, பரமசிவன் போலவே இருக்கிறார்களே! ஆகா! அவர்களோடு கூட இருக்கும் சிறியோர் இருவரும் சுப்ரமணியக் கடவுளும், வள்ளி நாயகியும் போல் அல்லவா காணப்படுகிறார்கள். இப்பேர்ப்பட்ட புண்ணியாத்மாக்களின் முகத்தைப் பார்த்தாலே, நம்மைப் பிடித்த கலியெல்லாம் நீங்கி விடும் போலிருக்கிறதே! ஆகா! நம்முடைய தேசம் தவம் செய்த தேசம் என்பதற்கு இப்பேர்ப்பட்ட உத்தம சிரேஷ்டர்கள் இன்னம் இருப்பதே தக்க சாட்சியல்லவா? இது நம்முடைய சிறுத் தொண்டரும், அப்பரும், சுந்தரரும், மற்றுமுள்ள யோகியரும், ஞானிகளும் இருந்த நாடென்பது இவர்களைப் பார்க்கும் போதுதான் நினைவிற்கு வருகிறது. உன்னையும் உன்னுடைய வெள்ளை ஆடைகளையும் பார்த்த உடனே எனக்கு எப்படி எங்கள் ஊரில் உள்ள தாசிப் பெண்ணான ஞானாம்பாளின் ஞாபகம் வந்ததோ, அது போல, அதோ நிற்கிற புண்ணியாத்துமாக்களைப் பார்க்கும் போது, நம்முடைய பண்டைக்காலத்து நாயன்மார்களுடைய நினைவு தோன்றுகிறதோடு, என் மனமும் பரவசம் அடைகிறது. என் வயிற்றில் இருந்த பசியெல்லாம் இவர்களுடைய முகத்தைப் பார்க்க, இருந்த இடம் தெரியாதபடி பறந்து போய்விட்டது. சோற்றுக் கடைக்குப் போக வேண்டும் என்ற எண்ணமே இப்போது என் மனசில் உண்டாகவில்லை. நான் இந்தப் புண்ணிய மூர்த்திகளின் கிட்ட நெருங்கி அவர்களுடைய முகதரிசனம் செய்து விட்டுப் போனால் நான் இந்த ஊரில் இருந்து விட்டுத் திரும்பி என் சொந்த ஊருக்குப் போகும் வரையில் பசி என்பதே இல்லாமல் என் வயிறு ஆனந்தமயமாக நிறைந்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்று கூறிய வண்ணம், அதற்கு மேல் அவ்விடத்தில் நிற்காமலும், மனோன்மணியம்மாளின் பக்கம் திரும்பிப் பாராமலும், அவள் ஏதாவது மறுமொழி சொல்வாளோ என்பதை எதிர்பார்க்காமலும் விரைவாக அப்பால் சென்று விட்டாள். நூற்றுக் கணக்கில் ஜனங்கள் அங்குமிங்கும் தாறு மாறாகப் போய் வந்து கொண்டிருந்தார்கள் ஆதலால், அவர்களால்