பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

மாயா விநோதப் பரதேசி

மறைக்கப்பட்டுப் போன அந்தக் கரூர் ஸ்திரீயை மனோன்மணியம்மாள் பிறகு பார்க்க இயலாமல் போய்விட்டது. ஆயினும், அந்த ஸ்திரீ கடைசியாகக் கூறிய வார்த்தைகள் கூர்மையான ஈட்டிகள் கொண்டு குத்துவது போல மனோன்மணியம்மாளின் செவிகளில் பாய்ந்து மனத்தைத் துளைத்துப் புண்படுத்தத் தொடங்கின. வேலாயுதம் பிள்ளை, அவரது மனைவி, கண்ணப்பா, வடிவாம்பாள் ஆகிய நால்வரது நடையுடை பாவைனைகளைப் பற்றியும், குணவொழுக்கங்களைப் பற்றியும், தான் முற்றிலும் கேவலமாகவும், இழிவாகவும் நினைத்ததற்கு நேர் விரோதமாக அந்தக் கரூர் ஸ்திரீ அபிப்பிராயம் கொடுத்து, அவர்களை தெய்வங்களுக்கு உவமை கூறி, அபாரமான ஸ்தோத்திர மொழிகளை உபயோகித்ததைக் கேட்க, மனோன்மணியம்மாள் சகிக்க ஒண்ணாத மன எழுச்சியும், ஆத்திரமும் கொண்டவளானாள். அதுவுமன்றி, தான் வெள்ளை ஆடை அணிந்து கொண்டிருந்ததில் இருந்து, தன்னை அவள் கரூரில் உள்ள ஞானாம்பாள் என்ற ஒரு தாசிப் பெண் என்று எண்ணிக் கொண்டதாகக் கூறியது மற்றதைவிடப் பன்மடங்கு அதிகரித்த கோபத்தையும், துடிதுடிப்பையும் உண்டாக்கின. அவ்வாறு தன்னிடம் வந்து தாறுமாறாகப் பிதற்றிய ஸ்திரீ ஒருவேளை பைத்தியக்காரியாக இருப்பாளோ என்ற எண்ணம் அவளது மனதில் உண்டானது ஆனாலும் அவளை மறுபடியும் கண்டு, தகுந்த சொற்களால், அவளைக் கண்டிக்க வேண்டும் என்ற அவா எழுந்து மனத்தைத் தூண்டியது. அந்த ஸ்திரீ வேலாயுதம் பிள்ளை முதலியோர் இருந்த இடத்தை நோக்கிச் சென்று கும்பலில் புகுந்து காணாமல் போய்விட்டாள் என்பது தெரியவே தான் அவளைத் தொடர்ந்து சென்றால், வேலாயுதம் பிள்ளை வீட்டாரின் கண்ணில் பட நேரும் என்ற நினைவைக் கொண்டு, தனது கோபத்தை அடக்கிக் கொண்டு அவ்விடத்திலேயே சிறிது நேரம் நின்று விட்டாள். கரூர் ஸ்திரீ கூறிய சொற்களைக் கேட்டதனால், அவளது மனம் கட்டிலடங்காமல் துடித்து அவள் கூறிய சொற்களையே சிந்தனை செய்து கொண்டிருந்தது ஆதலால், அதன் பிறகு அவள் வேலாயுதம் பிள்ளை முதலியோரைக் கவனிப்பதையே விட்டு விட்டாள். அந்தக் கரூர் ஸ்திரீயும் இங்கிலீஷ் படிக்காத கர்னாடக