பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

319

ஸ்திரீயாய் இருக்க வேண்டும் என்றும், அது பற்றியே அவள் பழைய மூட நம்பிக்கைகளையும், மூட எண்ணங்களையும் கொண்டிருக்கிறாள் என்றும், ஆகவே, அவள் வெளியிட்ட அபிப்பிராயங்களைத் தான் சிறிதும் பொருட்படுத்தாமல் அலட்சியமாக விட்டுவிட வேண்டும் என்றும், அவள் பல தடவை நினைத்துத் தனது மனத்தை அடக்கி வசப்படுத்த எத்தனித்தாள் ஆனாலும், அது, அவளது கட்டிலடங்காமல் துடிதுடித்து வருத்தியது. “என்ன ஆச்சரியம் இது! இங்கிலீஷ் படிக்காத ஜனங்கள் எல்லோரும் இதே விதமான மூட எண்ணங்களைத் தான் வைத்திருப்பார்கள் போலிருக்கிறதே! அன்றைய தினம் வந்த கொடிமுல்லையம்மாள், தமிழ் நாட்டில் தாசிகளும், அமங்கலிகளுமே பெரும் பாலும் வெள்ளை ஆடைகள் கட்டுகிறது வழக்கம் என்று சொன்னாள். அவள் சொன்னதும் இவள் சொன்னதும் ஒத்திருப்பதைப் பார்த்தால், மன்னார்குடியார் வீட்டில், நான் இவ்விதமான ஆடைகள் கட்டுவதற்கு அவர்கள் இனங்கவே மாட்டார்கள் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. கொடிமுல்லையம்மாள் மன்னார் குடியாரைப் பற்றித் தெரிவித்ததெல்லாம் உண்மையான சங்கதியாகத் தான் இருக்க வேண்டும். இதை எல்லாம் அறிந்திருந்தும் என் தகப்பனார் இவர்களுடைய சம்பந்தத்தையே பிடிவாதமாக நாடுகிறாரே! என்ன ஆச்சரியம் இது! நான் எவ்வளவு தான் சொன்னாலும், என் தகப்பனார் என்னை அந்த வீட்டில் தான் கொடுக்க வேண்டும் என்று அடவாதம் செய்கிறார். என்னைக் கண்டு ஒருவேளை மன்னார் குடியார் திருந்தி தமது அஞ்ஞான இருளை விலக்கிக் கொள்வார்களோ என்று நான் பார்த்தால், ஆற்று மனலையும் சமுத்திரத்தின் துளிகளையும் எண்ணினாலும் எண்ணிவிடலாம் போலிருக்கிறது. இவர்களுடைய மனப்போக்கையும் கொள்கைகளையும் மாற்ற முடியா தென்பது பரிஷ்காரமாகத் தெரிகிறது” என்று மனோன்மணியம்மாள் நினைத்துப் பலவாறு எண்ணமிட்டவளாய் அந்த நிலைமையில் தான் என்ன செய்வதென்பதையாவது, தான் தனது தந்தையின் மனதை எப்படி மாற்றுவது என்பதையாவது உணராதவளாய் நிலைகலங்கி அப்படியே சிறிது நேரம் நின்ற பின், தனது தந்தை முதலியோர்