பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்

31

அனுபவிக்கும்படி செய்ய வேண்டும். அது தான் உண்மையான தண்டனை.

"இடும்பன் சேர்வைகாரன்":- நீங்கள் பொதுவாகப் பேசுகிறீர்கள்! நாம் இன்னின்னாரை இன்னவிதம் நடத்த வேண்டும் என்று ஒவ்வொருவருடைய விஷயத்தைப் பற்றியும் குறிப்பாகச் சொன்னால் அந்த மாதிரியே நான் நிறைவேற்றி வைக்கத் தடை இல்லை. ஆனால், நாம் தண்டிக்க வேண்டிய மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். எல்லோரையும் ஒரே காலத்தில் தண்டிப்பது தான் கொஞ்சம் சிரமமாக இருக்கும்.

மாசிலாமணி:- எல்லோரையும் ஒரே காலத்தில் தண்டிக்க வேண்டும் என்ற அவசியம் ஒன்றும் இல்லை. ஒரு காலத்தில் எத்தனை பேரை சுலபத்தில் தண்டிக்கக் கிடைக்கிறதோ, அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளுங்களேன்.

இடும்பன் சேர்வைகாரன்:- தண்டிப்பதென்றால், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தான் என் மனசுக்கு இன்னமும் விளங்கவில்லை.

மாசிலாமணி:- என்னுடைய அண்ணன் என்ன சொன்னார் தெரியுமா? வடிவாம்பாள் இருக்கிறாள் அல்லவா. அவளுடைய கருவத்தை அடக்குவதற்கு, அவளுடைய மூக்கை அடியோடு அறுத்துப் போட்டு, அவளுடைய முகம் பயங்கரமாக மாறிப் போகும்படி செய்துவிட வேண்டும்.

இடும்பன் சேர்வைகாரன்:- பேஷ்! நல்ல யோசனை! அதற்கு சவரன் கத்தி ஒன்று இருந்தால், அதுவே போதுமானது. நாலைந்து ஆள்கள் அவளுடைய வாயில் துணியை அடைத்துக் கீழே போட்டு அமுக்கிக் கைகளையும் கால்களையும் பிடித்து அழுத்திக் கொண்டால், சவரன் கத்தியால் மூக்கை ஒரே நிமிஷத்தில் அறுத்துப் போட்டு விடலாம். இது சுலபமான காரியம்தான். மூக்கை அறுத்த பிறகு அவளை அவர்களுடைய வீட்டிலேயே விட்டுவிட வேண்டியதுதானே! யாரையும் இங்கே கொண்டுவர வேண்டியதில்லையே.