பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

மாயா விநோதப் பரதேசி

அமைக்கப் பட்டிருந்த தனியான விடுதிக்குள் பஞ்சனையின் மீது படுக்க வைக்கப்பட்டிருந்த கந்தசாமி காலை எட்டு மணி சுமாருக்கு மயக்கம் தெளிந்தவனாய், எழுந்து உட்கார்ந்து தனது கண்களைத் துடைத்துக் கொண்டு நாற்புறங்களிலும் திரும்பிப் பார்த்தான். நடு இரவில் இடும்பன் சேர்வைகாரன் முதலியோர் திடீரென்று நுழைந்து அவனைப் பிடித்துக் கொண்ட பிறகு அவன் மயக்கத்தில் ஆழ்ந்து விட்டான்.ஆதலால், அதற்குப் பிறகு என்ன நடந்ததென்பது அவனுக்குச் சிறிதளவும் தெரியாதென்ற விஷயத்தை நாம் கூறுவது மிகையாகும். அவ்வாறு தோன்றிய மனிதர்கள் அவனது உணர்விற்குத் தெரிந்து வேறே எதுவும் செய்ததாக அவனுக்குத் தோன்றாது இருந்தமையால், அது கனவின் காட்சி என்றே கந்தசாமி நினைத்துக் கொண்டதன்றி, தான் அப்போதும், சென்னையில் பட்டாபிராம பிள்ளையினது பங்களாவிலேயே இருப்பதாக அவன் எண்ணியிருந்தான். ஆனால், அவன் விழித்துக் கொண்டு நன்றாகத் தெளிவடைந்து கட்டிலை விட்டு இறங்கி அந்த விடுதியை உற்றுப் பார்க்கப் பார்க்க, அது தான் மனோன்மணியோடு சம்பாவித்துக் கொண்டிருந்து சிறை வைக்கப்பட்ட விடுதியல்ல என்ற நிச்சயம் ஏற்பட்டது. ஒருகால், தான் நித்திரையில் ஆழ்ந்திருந்த காலத்தில், பட்டாபிராம பிள்ளை ஏதோ கருத்தோடு ஆள்களை விட்டுத் தன்னைத் தூக்கிக் கொண்டு போய் வேறொரு விடுதியில் படுக்க வைத்திருப்பாரோ என்ற நினைவுண்டாயிற்று. முதல் நாள் இரவில், தான் ஒரு சோபாவின் மேல் உட்கார்ந்திருந்தபடி தூங்கிப் போய்விட்டது அவனுக்கு நன்றாக நினைவிருந்தது. பட்டாபிராம பிள்ளை தன்னை வேறொரு விடுதியில் கொண்டு போய்ப் படுக்க வைக்கச் செய்திருந்தாலும், அப்படிப்பட்ட மகா அற்புதமான பஞ்சணை மீது படுக்க வைத்தது ஆச்சரியத்தை விளைவித்தது. அந்தப் பஞ்சனை ஒரு மகாராஜாவின் அந்தப்புரத்தில் இருக்கத் தக்க சிறப்பு வாய்ந்த மகா உன்னதமான பஞ்சனையாக இருந்ததன்றி, அந்த விடுதியில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளும், அங்கு காணப்பட்ட விலை உயர்ந்த அழகிய வஸ்துக்களும் பிரமிக்கத்தக்கவையாக இருந்தன. தான் முதல் நாள் படுத்திருந்தது, மனோன்மணியின் சயன அறை. ஆதலால், அவளது சயன