பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

37

மாளிகையை விட அயிரம் மடங்கு சிரேஷ்டமான அறையில் அவர் தன்னைக் கொண்டு போய்ப் படுக்க வைத்ததன் முகாந்திரம் என்னவாக இருக்கும் என்று கந்தசாமி சிந்திக்கலானான். பட்டாபிராம பிள்ளை மனைவியற்ற விதுரர் ஆகையால், அவர் தனது அழகைக் கண்டு தன்மீது மோகங்கொண்டு, தன்னிடம் தனிமையில் வந்து தமது கருத்தை வெளியிடலாம் என்ற நினைவோடு அந்த மஞ்சத்தில் தன்னைப் படுக்கச் செய்திருப்பாரோ என்ற சந்தேகம் அவனது மனதில் உதித்தது ஆனாலும், அவர் அந்த இரவு முழுதும் தன்னிடம் வராதிருந்ததில் இருந்து, அந்தச் சந்தேகம் உண்மையாக இராதென்றே அவன் ஒருவாறு நிச்சயித்துக் கொண்டான். தனது நண்பனான கோபாலசாமி தாம் வேஷம் போட்டுக் கொண்டு வந்த வரலாற்றை ஒருவேளை வெளியிட்டிருப்பானோ என்றும், தான் கந்தசாமி என்று பட்டாபிராம பிள்ளை அறிந்து கொண்டமையால், தன்னை அவ்வளவு சிறப்பான அந்த இடத்தில் சயனிக்கச் செய்திருப்பாரோ என்றும் இன்னொரு சந்தேகம் கந்தசாமியினது மனதில் தோன்றியது. அவன் மேன்மேலும் சிந்தித்துப் பார்க்கப் பார்க்க, அந்த சந்தேகமே உண்மையாக இருக்க வேண்டும் என்று அவன் ஊர்ஜிதம் செய்து கொண்டவனாய் எழுந்து, அந்த விடுதியில் அங்கும் இங்கும் உலாவத் தொடங்கினான். அவனது மனதில் பலவிதமான எண்ணங்கள் எழுந்து வதைக்கலாயின. தான் கந்தசாமி என்பதைப் பட்டாபிராம பிள்ளை தெரிந்து கொண்டதால், தான் போலீசார் முதலிய அன்னியருக்குச் சமாதானம் கூறவேண்டிய நிலைமையில் இருந்து தப்பியது, மனதிற்கு ஒருவித ஆறுதலைக் கொடுத்தது. ஆனாலும், பட்டாபிராம பிள்ளையின் முகத்தில் தான் எப்படி விழிப்பது என்ற கவலையும் மனக்கிலேசமும் தோன்றி அவனை வதைக்கலாயின. தான் ஆண் மகனாய் இருந்தும் பெண் உடை தரித்து வெட்கம் இன்றி வெளியில் வந்து பெண்ணைப் போல நடந்தது, தனது கண்ணியத்திற்கு நிரம்பவும் குறைவான செய்கையாதலால், அவரைக் கண்டு அவரிடம் தான் எப்படி வார்த்தையாடுவது என்ற யோசனையே பெரிதாக எழுந்து மனதைப் புண்படுத்தலாயிற்று. அது நிற்க, முதல் நாளை பகலில்,