பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

39

கொண்டிருந்தமையால், அவற்றிற்கு அப்பால் என்ன இருந்த தென்பதே தெரியாமல் இருந்தது. ஆனால் அவன் படுக்க வைக்கப்பட்டிருந்த பஞ்சணைக்குப் பக்கத்தில் சுவரின் மேல் பாகத்தில் ஒன்றரை ஆள் உயரத்தில் இரண்டு ஜன்னல்கள் காணப்பட்டன. அந்த ஜன்னல்கள் கட்டிலின் மட்டத்தில் வைக்கப்படாமல் அவ்வளவு உச்சியில் பொருத்தப்பட்டிருந்தது அவனுக்கு ஆச்சரியமாகத் தோன்றியது. அவ்வளவு அழகாகவும் நாகரிகமாகவும் கட்டப்பட்டிருந்த அந்த சிரேஷ்டமான மாளிகையில் ஜன்னல்கள் அம்மாதிரி அநாகரிகமாக வைக்கப்பட்டிருந்தது அவனுக்கு வியப்பாகத் தோன்றியது ஆனாலும், அந்தப் பஞ்சணையின் மேல் பாகத்தில் மின்சார விசிறி ஒன்று சுழன்று மனோரம்மியமான தென்றல் காற்றை எழுப்பிக் கொண்டிருந்தமையால், காற்றின் தேவையை அவன் அவ்வளவாக உணராமல் உற்சாகத்துடன் கட்டிலின் மேல் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தான். பொழுது நன்றாக விடிந்து சூரிய வெளிச்சமும் உட்புறத்தில் பளிச்சென்று வீசத் தொடங்கியது ஆகையால், அவ்வளவு நேரமாயும், தன்னிடம் யாரும் வரவில்லையே என்று அவன் வியப்புற்றவனாய் எழுந்து சிறிது தூரத்திற்கப்பால் இருந்த கதவைப் பிடித்து இழுத்தான். அது வெளிப்புரத்தில் தாளிடப்பட்டோ பூட்டப்பட்டோ இருந்ததாகத் தோன்றியது. அதைக் காண அவனது மனத்தில் பெருத்த சஞ்சலம் தோன்றி வதைக்கத் தொடங்கியது. தான் கந்தசாமி என்பதைப் பட்டாபிராம பிள்ளை தெரிந்து கொண்டிருந்தால், அவர் அவ்வாறு கதவை வெளியில் பத்திரப்படுத்தித் தன்னைச் சிறை வைத்திருப்பாரா என்ற சந்தேகமும் தோன்றியது. ஒருகால், கதவைத் திறந்து வைத்திருந்தால், தான் அவரது முகத்தில் விழிக்க வெட்கி, அவருக்குத் தெரியாதபடி வெளியில் போய்விட்டால், தன்னோடு பேச சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விடும் என்ற நினைவினால் தூண்டப்பட்டு, அவர் அந்தக் கதவை அவ்வாறு பத்திரப்படுத்தி இருக்கலாம் என்ற யோசனையும் தோன்றியது. ஆகவே, அவன் அவ்விடத்தை விட்டு மறுபடியும் பஞ்சனையை அடைந்து அதன் மேல் முன்போல உட்கார்ந்து கொண்டான். அவனது மனத்தில் மனோன்மணியின் வடிவமும், அவளுடன்