பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

மாயா விநோதப் பரதேசி

நிச்சயம். ஏனென்றால், நான் எங்கள் குடும்பத்தைப் பற்றியும், என்னைப் பற்றியும் சொல்லிய விவரங்களை எல்லாம் இவர்கள் பொய் என்று நினைக்க ஏதுவில்லை அல்லவா? ஆகவே, நான் இன்னான் என்பது இவர்களுக்குத் தெரிந்திருந்தால், எனது மனப்போக்கை இவர்கள் நன்றாக அறிந்து கொண்டும், இந்தக் கலியாணத்தை நடத்த எண்ண மாட்டார்கள் என்பது நிச்சயம். அப்படி இவர்கள் எங்களுடைய சம்பந்தத்தை விலக்கத் தீர்மானித்திருக்கும் பக்ஷத்தில், என்னை இவர்கள் இப்படிப்பட்ட சிரேஷ்டமான இடத்தில் இருக்கச் செய்வாரா என்ற சந்தேகமும் தோன்றுகிறது. எந்த விஷயத்தையும் நான் நிச்சயமாகத் தெரிந்து கொள்வதற்கு இங்கே வேறே மனிதர் யாரும் காணப்படவில்லையே! பொழுது நன்றாக விடிந்து போயிருக்கிறது. எவரும் வந்து இன்னமும் கதவைத் திறக்கவில்லை; இனி எப்போது வந்து திறப்பார்கள் என்பதும் தெரியவில்லை. இன்னமும் பட்டாபிராம பிள்ளை முதலியோர் படுக்கையில் இருந்து எழுந்திருக்காமல் இருப்பார்களா? அல்லது, அவர்கள் எழுந்திருந்தும் வேறே ஏதாவது கருத்தோடு இங்கே வராமல் இருப்பார்களா? ஒன்றும் விளங்கவில்லையே" என்று பலவாறு சிந்தனை செய்தவனாய் நமது கந்தசாமி கட்டிலை விட்டுக் கீழே இறங்கி மறுபடி உலாவத் தொடங்கினான். அவ்வாறு மேலும் அரைநாழிகை காலம் கழிந்தது. கதவு திறக்கப்படாமலேயே இருந்தது. அப்போது பொழுது எவ்வளவு ஆகி இருக்கலாம் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் அவனது மனதில் தோன்றியது; அவ்வளவு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்த விடுதியில் எவ்விடத்திலாவது கடிகாரம் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற யோசனை தோன்றியது. ஆகையால், அவன் நாற்புறங்களிலும் திரும்பி சுற்றும் முற்றும் ஆராய்ச்சி செய்து பார்த்தான். எவ்விடத்திலும் கடிகாரம் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆகவே அவன் அவ்விடத்தில் இருந்த பஞ்சனையின் மீதேறி நின்று கொண்டு சுவரின் உச்சியில் இருந்த ஜன்னல்களுள் ஒன்றன் வழியாக வெளிப்பக்கத்தில் தனது பார்வையைச் செலுத்தினான். செலுத்தவே, அவன் நிரம்பவும் ஆச்சரியம் அடைந்தான். ஏனெனில், ஜன்னலுக்கப்பால் இருந்த