பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

67

தோட்டத்தின் மரங்கள் யாவும் நிரம்பவும் தணிந்திருந்ததன்றி தரை கண்ணில் படாதபடி மிகவும் கீழே இருந்தது. பட்டாபிராம பிள்ளையினது பங்களாவில் ஒரே ஒரு மேன்மாடம் இருந்த தென்றே அவனுக்கு ஒருவித நினைவு உண்டாயிற்று. அந்த உப்பரிகையும் அவ்வளவு அதிக உயரமாக இல்லாமல் இருந்தது. பக்கத்தில் இருந்த மரங்கள் எல்லாம் உப்பரிகையைவிட அதிக உயரமாக வளர்ந்து ஆகாயத்தை அளாவிக் கொண்டிருந்தன. ஆனால், அவன் இப்போது பார்த்த இடத்தில் தான் இருந்த மாடம் மகா உயரமான இடமாகத் தோன்றியது. ஆகையால், அநேகமாய், அது மூன்றாவது, அல்லது, நான்காவது உப்பரிகையாக இருக்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் அவனது மனதில் தோன்றியது. அவனது மனம் மிகுந்த வியப்பையும் குழப்பதையும் அடைந்தது. அவன் அந்த ஜன்னலை விட்டு, அடுத்த ஜன்னலண்டை போய் நின்று கொண்டு உற்று நோக்கினான். அந்த மாளிகையை அடுத்தாற் போல வீடுகள் அடர்த்தியாக நிறைந்திருந்த பல தெருக்கள் காணப்பட்டன. அவற்றிற்கப்பால், ஓர் ஆறும் தென்பட்டது. அவைகளைக் கவனித்த வண்ணம் அவன் ஆழ்ந்து சிந்தனை செய்யலாயினான். "என்ன ஆச்சரியம் இது! இந்தக் கட்டிடத்திற்குப் பக்கத்தில் வீடுகள் ஏராளமாகக் காணப்படுகின்றனவே! இங்கே கால் மயில் துரத்திற்கோர் இடத்தில் தானே பங்களாக்கள் இருந்தன. நான் இங்கே வந்த போது இந்த பங்களாவிற்கு சமீபத்தில் வீடுகள் காணப்படவில்லையே! அதுவுமன்றி, இவ்வளவு பக்கத்தில் ஆறு ஒன்று இப்போது காணப்படுகிறதே! நான் பார்த்த வரையில் இந்த இடத்தில் ஆறு இருந்ததாகவே நினைவுண்டாக வில்லையே! என்ன கண்கட்டு வித்தை இது? நேற்று இரவில் நான் துங்கிய காலத்தில் இருந்தது ஓர் இடம், இப்போது நான் இருப்பது வேறே இடம். பட்டாபிராம பிள்ளை ஏதோ கருத்தோடு என்னை நான் இருந்த இடத்தில் இருந்து தூக்கிக் கொண்டு வந்து அதே பங்களாவில் வேறொரு விடுதியில் விட்டிருக்க வேண்டும் என்று நான் உத்தேசித்தது தவறாகத் தோன்றுகிறதே! இந்தப் பங்களாவே பட்டாபிராம பிள்ளை வசிக்கும் பங்களா அல்ல போலிருக்கிறதே! அந்த இடத்தில் இருந்து நான் இந்த இடத்திற்கு