பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

71

தன்னிடம் பணிவாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வதில் இருந்து பட்டாபிராம பிள்ளை முதலியோர் தன் விஷயத்தில் கோபமாவது அவமரியாதையாவது காட்ட எண்ணவில்லை என்றும், அவர்கள் முன்னிலும் அதிகமாகத் தன்னை கெளரவப் படுத்துவதற்கு அனுகூலமாக ஏதோ புதிய சம்பவம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் யூகித்துக் கொண்டான். அப்போது காலை சுமார் 7-மணி இருக்கலாம். அந்த வேளைக்கு அவன் எப்போதும் பலகாரம், அல்லது, பழைய அமுது உண்கிறது வழக்கம். ஆதலால், அவனது வயிற்றில் பசி உண்டாகி இருந்தது. ஆனால், அந்த வேலைக்காரி நல்ல உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவளா என்பதையும், இன்னம் தான் கேட்க எண்ணிய சந்தேகங்களையும் கேட்டு நிவர்த்தி செய்து கொண்டு, அதன் பிறகு தனது போஜனத்தைக் கவனிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டவனாய், அந்த வேலைக்காரியை நோக்கி அன்பாகப் பேசத் தொடங்கி "ஏனம்மா! உன் பெயர் என்ன?" என்றான்.

வேலைக்காரி, "என் பெயர் பார்வதி" என்றாள்; உடனே கந்தசாமி, "நீ எந்த ஜாதியைச் சேர்ந்தவள்?" என்றான். பார்வதி "நான் சைவ வேளாளர் வம்சத்தைச் சேர்ந்தவள். இந்தப் பங்களாவில் இன்னும் இரண்டு வேலைக்காரிகள் இருக்கிறார்கள். அவர்கள் மட்டமான ஜாதியைச் சேர்ந்தவர்கள். நீங்கள் மேலான ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஆகையால், அவர்களிடம் ஆகாரம் அனுப்பினால் நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நினைத்து எஜமானர் இவைகளை என்னிடம் கொடுத்தனுப்பினார். இந்த வீட்டு எஜமானர் தாமும் உங்களுடைய ஜாதியைச் சேர்ந்தவர் என்றும், ஆகையால் நீங்கள் கொஞ்சமும் யோசனை செய்யாமல் சாப்பிடலாம் என்றும் சொல்லச் சொன்னார்" என்றாள். அதைக் கேட்கவே கந்தசாமியின் மனதில் ஒருவித சந்தேகம் உதித்தது. தான் மன்னார் குடி வேலாயுதம் பிள்ளையின் மைத்துணி என்று சொல்லிக் கொண்டு வந்து, மனோன்மணியின் கலியான விஷயங்களை எல்லாம் அறிந்தவள் போல, அவளிடம் பேசியதில் இருந்து பட்டாபிராம பிள்ளை சைவ வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது தனக்குத் தெரிந்திருக்க வேண்டும்