பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

மாயா விநோதப் பரதேசி

என்பதைக் கருதாமல், பட்டாபிராம் பிள்ளை தனது ஜாதியின் உயர்வைப்பற்றி எதற்காகப் புகழ்ந்து பேசினார் என்ற சந்தேகம் கந்தசாமியின் மனதில் உண்டாயிற்று. அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்கு முன் முக்கியமான சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள நினைத்து, "ஏன் பார்வதி! உங்கள் எஜமானருடைய ஜாதி உயர்வான தென்பது எனக்கு நன்றாகத் தெரியும். அது எனக்குத் தெரியும் என்பதை உங்கள் எஜமானரும் அறிவார். ஆகையால், அவர் இந்த விஷயத்தில் எனக்குச் சமாதானம் சொல்லி அனுப்பவே முகாந்திரம் இல்லை. அது போகட்டும். நேற்று நான் வேறே ஓர் அறையில் ஒரு சோபாவின் மேல் அல்லவா படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தேன். அப்படி இருக்க, நான் எப்படி இந்த விடுதிக்கு வந்தேன் என்பது தெரியவில்லையே! நான் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒருவேளை என்னை யாராவது சோபாவோடு தூக்கிக் கொண்டு வந்து இந்தப் பஞ்சணையில் விட்டார்களா? அங்கே இருந்த என்னை என்ன உத்தேசத்தோடு இங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள்? இந்த விடுதி அதே பங்களாவில் இருக்கிறதா? அல்லது வேறே பங்களாவைச் சேர்ந்ததா? வேறே இடமானால், இது எந்தப் பேட்டையில் உள்ள இடம்?" என்றான்.

உடனே வேலைக்காரி, "அம்மா! நீங்கள் பேசுவது வேடிக்கையாக் இருக்கிறது; நீங்கள் நேற்று இரவில் இருந்த உங்களுடைய பங்களாவில் இப்படிப்பட்ட விடுதி இருக்கிறதா, இல்லையா என்பது உங்களுக்கே தெரியாதா? அப்படியிருக்க, இது அதே பங்களாவில் உள்ள வேறே விடுதியா என்று கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதுவுமன்றி, எங்கள் எஜமானருடைய ஜாதி இன்னதென்பது உங்களுக்கு தெரியும் என்று நீங்கள் சொல்வதும் தவறு. எங்களுடைய எஜமான் இன்னார் என்பதே உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆகையால் நீங்கள் இப்படித் தடுமாறிப் பேசுகிறீர்கள் என்பது நிச்சயம்; உங்களுடைய சந்தேகத்தை நான் முதலில் நிவர்த்தி செய்து விடுகிறேன். அதன் பிறகு உங்களுக்கு எல்லாம் தெளிவுபட்டுப் போகும்" என்றாள்.