பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

75

தடுப்பதற்காகவே கடவுள் தன் மனதில் புகுந்து, பெண் வேஷந் தரித்து அவளிடம் போக வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்திருக்கிறார் என்ற நினைவுண்டாயிற்று. கடவுளின் காரியங்களும் அற்புதச் செயல்களும் இருந்த வகையை நினைத்து நினைத்துக் கந்தசாமி முற்றிலும் வியப்பும் களிப்பும் அடைந்ததன்றி, மனோன்மணி அம்மாளுக்கு நேர இருந்த பெருத்த அபாயம் தன் மூலமாக நிவர்த்தியானதைக் குறித்து அபரிமிதமான உவகை அடைந்தவனாய்ச் சிறிது நேரம் மௌனத்தில் ஆழ்ந்திருந்தான். ஆண்மக்கள் கண்டு ஆசை கொள்ளத் தக்க மேம்பாடு எதுவும் மனோன்மணியம்மாளிடம் இல்லை என்று தான் நினைத்ததற்கு நேர் விரோதமாக அந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறதே என்ற நினைவும் உண்டாயிற்று. வாடி மங்கிப் போன அவளது அழகைக் கண்டு ஓர் ஆடவன் அவள் மீது மோகங் கொண்டது நம்பத்தகாத விஷயமாகத் தோன்றியது. ஸ்திரீகளின் உண்மையான யோக்கியதையை அறிந்து கொள்ளாமல் மனிதர் தூரப்பார்வையில் இருந்தே மதிமயங்கி, தீபச்சுடரில் போய் விழுந்து மடியும் வீட்டில் பூச்சியைப் போல, மேல் விழுந்து அவளை அடையும் பொருட்டு எப்படிப்பட்ட துன்மார்க்கமான செய்கைகளையும் கூசாமல் புரிகிறார்களே என்ற நினைவு உண்டாயிற்று. மனோன்மணியம்மாளின் மீது இன்னொருவன் அவ்வாறு கடுமையான மோகங் கொண்டு அவளைத் தூக்கிக்கொண்டு போகும்படியும், அதைத் தான் உணர்ந்து கொள்ளும்படியும் கடவுள் செய்தது, அதனால் தனக்கு ஒரு படிப்பினை கற்றுக் கொடுப்பதற்காகவோ என்றும் கந்தசாமி நினைத்தான். "நீ இவளை வெறுக்கிறாயே; இவள் மீது கடு மையல் கொள்ளக் கூடியவர்களும் உலகத்தில் இருக்கிறார்கள் பார்" என்று தனக்குச் சுட்டிக்காட்டுவதற்காகவே, கடவுள் அவ்வாறு சூழ்ச்சி செய்திருப்பாரோ என்ற எண்ணமும் கந்தசாமியினது மனதில் தோன்றியது. அந்த அபூர்வமான சம்பவத்தைப் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க, அவனது மனம் மனோன்மணியம்மாளது விஷயத்தில் ஓர் இளக்கமும் அன்பும் கொள்ள ஆரம்பித்தது. அவளது மனக் குணக்கையும் படிப்பினால் ஏற்பட்ட மாறுபாடுகளையும் நினைக்க, அவள் தனக்குச் சரிப்பட,