பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

77

ஆகையால், அந்த விவரங்களை மாத்திரம் நீங்கள் கேட்க வேண்டாம்; மற்றபடி நீங்கள் காலால் இடும் வேலையை நான் தலையால் செய்யக் காத்திருக்கிறேன்" என்றாள்.

அதைக் கேட்ட கந்தசாமி மிகுந்த கலக்கமும் கவலையும் அடைந்தவனாய், அப்படிப்பட்ட பரமரகசியமான இடத்தில் இருந்து தான் எப்படித் தப்பிப் போகிறதென்ற அச்சமும் மலைப்பும் தோன்றி வதைக்கலாயின. ஆனாலும், அவன் மறுபடியும் பேசத்தொடங்கி, "அப்படியானால், என்னைக் கலியாணம் செய்து கொண்டு எந்த விவரத்தையும் எனக்குச் சொல்லாமல் என் ஆயிசுகால பரியந்தம் என்னை மறைவாக ஒளித்து வைத்திருக்க வேண்டும் என்று உன் எஜமானர் தீர்மானித் திருக்கிறாரா?" என்றான்.

வேலைக்காரி, "அவருடைய உள்கருத்து இன்னதென்பது எனக்குத் தெரியாது. அவர் என்னிடம் சொன்ன வரையில் நான் தெரிவித்து விட்டேன். நாளைய தினம் காலையில் எட்டு மணிக் கெல்லாம் உங்களுக்கும் அவருக்கும் கலியாணம் நடக்கப் போகிறது. மறுநாள் இரவிலேயே அநேகமாய் சாந்தி முகூர்த்தமும் வைத்துக் கொள்வார் போலிருக்கிறது. அப்போது அவர் உங்களோடு அன்னியோன்னியமாகப் பழகிய பின், உங்களை நம்பி ரகசியங்களை வெளியிடலாம் என்ற தைரியம் ஏற்படுமானால், ஒருவேளை அவர் எல்லா ரகசியங்களையும் உங்களிடம் சொல்லலாம். ஆனாலும் நீங்கள் உங்களுடைய தகப்பனாருக்கு ரகசியமாக எழுதி விஷயங்களைத் தெரிவித்து விட்டால், அவர் ஒருவேளை நியாயஸ்தலத்தின் மூலமாக இவர் பேரில் நடவடிக்கை ஏதாவது எடுத்துக் கொண்டால், இவருக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும் என்ற பயம் இருக்கும் அல்லவா, ஆகையால், இவர் தம்முடைய உண்மைகளை எவ்வளவு தூரம் உங்களிடம் வெளியிடுவார் என்பது நீங்கள் அவரோடு பழகப் பழகத்தான் காலக்கிரமத்தில் தெரியும்" என்றாள்.

அதைக் கேட்ட கந்தசாமி தான் அதற்கு மேல் என்ன சொல்வ தென்பதை அறியாதவனாய்ச் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்த பின்னர் மறுபடி பேசத்தொடங்கி, "சரி; என்னுடைய