பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

மாயா விநோதப் பரதேசி

அதைக் கேட்ட வடிவாம்பாளும் திடுக்கிட்டு பிரமிப்படைந்து, "என்ன ஆச்சரியம்! இது உயிரில்லாத பொம்மையா! முகத்தைப் பார்த்தால், உயிரோடு மனிதர் தூங்குவது போல் அல்லவா இருக்கிறது" என்று கூறிய வண்ணம், அந்த முகத்தைத் தனது கையால் தடவிப்பார்த்து அது உண்மையிலேயே ஒரு பதுமை என்பதை நிச்சயித்துக் கொண்டாள்.

அடுத்த நிமிஷத்தில், அவர்கள் இருவரும் அவ்விடத்தை விட்டுத் திரும்பிப்போய்ப் படிக்கட்டின் வழியாகக் கீழே இறங்கி சாமியார் படுத்திருந்த அறையை அடைந்தனர். அவர் முன் போலவே சயனத்தில் சாய்ந்து கொண்டிருந்தார். இவர்களைக் கண்டவுடனே அவர் மகிழ்ச்சியோடு புன்னகை செய்து, "என்ன சங்கதி! மேலே போய்ப் பார்த்தீர்களா? உங்களுடைய சந்தேகம் எல்லாம் நிவர்த்தியானதா?" என்றார்.

உடனே கண்ணப்பர் வியப்போடு பேசத் தொடங்கி, "சுவாமிகளே! என்ன ஆச்சரியம் இது? இன்றைய தினம் காலையில் தானே தங்களுக்குக் கடிதம் வந்தது! வந்து இப்போது ஒரு சுமார் ஆறுமணி நேரம் இருக்கலாம். இதற்குள் தாங்கள் இத்தனை யோசனைகளையும் செய்ததன்றி, அதற்கு அனுகூலமாக இப்படிப்பட்ட பெரிய பொம்மையையும் செய்து வைத்திருக்க எப்படி சாத்தியப்பட்டது? இப்படிப்பட்ட பதுமையை ஒருவன் செய்து முடித்துக் காயவைத்து உருப்படுத்துவதென்றால், அதற்குக் குறைந்தது பத்து தினங்களாவது பிடிக்குமே. தாங்கள் இவ்வளவு சீக்கிரத்தில் இதை எப்படிச் செய்து முடித்தீர்கள்?" என்றான்.

அதைக் கேட்ட சாமியார் புன்னகை செய்து, "இந்த உருவத்தை நான் இதற்காக இன்றைய தினம் தயாரித்தேன் என்றா நினைக்கிறீர்கள்? அது எப்படி சாத்தியமாகும். நான் என்ன பிரம்மாவா? பிரம்மாவினால் கூட் மனிதனை உடனே சிருஷ்டிக்க முடிகிறதில்லையே! மனிதனுடைய கரு பத்துமாசகாலம். தாய் வயிற்றிலிருந்து, பிறகு வெளிப்பட்டு சிசுவாகவும், பாலனாகவும் சுமார் இருபது வருஷம் வளர்ந்த பிறகல்லவா ஆகிறது" என்றார்.