பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

மாயா விநோதப் பரதேசி

தருணத்தில், வேலைக்காரி மறுபடியும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து ஒரு புகைப்படத்தைக் கந்தசாமியிடத்தில் கொடுத்தாள்.

மிகுந்த ஆவலோடு கந்தசாமி அதை வாங்கி அதில் காணப்பட்ட புருஷ வடிவத்தை உற்று நோக்கினான். நோக்கவே, அவனது முகம் சடக்கென்று மாறுபட்டது. விவரிக்க முடியாத அபாரமான திகிலும் குழப்பமும் அவனது மனதில் குடி கொண்டன. முகம் முற்றிலும் விகாரப்பட்டுப் போயிற்று. ஆனாலும் அருகில் வேலைக்காரி நின்றதைக் கருதி அவன் தனது பதைப்பையும் முக மாறுபாட்டையும் அவ்வளவாக வெளிப்படுத்தாமல், தன்னை அடக்கிக் கொண்டு அந்த வேலைக்காரியை பார்த்து, "பார்வதி! நீ போன பிற்பாடு நான் பலகாரம் கொஞ்சம் சாப்பிட்டேன். அது வயிற்றில் விழுந்தவுடன், ஒருவிதமான அயர்வு உண்டாகி உடம்பை அழுத்துகிறது. தூக்கம் கண்களை மயக்குகிறது. நான் முதலில் கொஞ்சம் இப்படியே படுத்துத் தூங்குகிறேன். நீ போய் வேறே ஏதாவது வேலை இருந்தால் பார்த்துவிட்டு மத்தியானம் இங்கே வா. அதற்குள் நான் இந்தப் படத்தையும் பார்த்து என் மனசை ஒரு வழிக்குக் கொண்டு வருகிறேன்" என்றான்.

அதைக் கேட்ட வேலைக்காரி அப்படியே ஆகட்டும் என்று கூறிக் கந்தசாமியைத் தனிமையில் விடுத்து அவ்விடத்தை விட்டு நடந்து கதவைத் தாளிட்டுக் கொண்டு அப்பால் போய்விட்டாள்.

உடனே கந்தசாமி அந்தப் புகைப்படத்தை எடுத்து நன்றாக உற்று நோக்கிச் சிறிது நேரம் ஆழ்ந்து யோசனை செய்து, "ஆகா! இப்பொழுதல்லவா உண்மை தெரிகிறது! இந்தப் படத்தில் இருப்பது கும்பகோணம் சட்டைநாத பிள்ளையினுடைய தம்பி மாசிலாமணியல்லவா! ஆம்; கொஞ்சமும் சந்தேகம் இல்லை. என்னை எடுத்துக் கொண்டு வரும்படி செய்தவன் மாசிலாமணியாகத் தான் இருக்க வேண்டும். இந்த ஊர் கும்பகோணமாகத் தான் இருக்க வேண்டும். இதோ பக்கத்தில் தெரிவது காவிரி ஆறு போலத் தான் இருக்கின்றது. கும்பகோணத்தில் உள்ள இந்த துஷ்டன் பட்டணத்தில் உள்ள மனோன்மணியம்மாளைப் பார்க்கவாவது! அவள் மேல் காதல் கொள்வதாவது! அதெல்லாம்