பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

87

அன்றைய தினம் பகலிலும் இரவிலும் அந்த மாளிகையில் மகா நேர்த்தியான விருந்துச் சாப்பாடு இடும்பன் சேர்வைகாரன் முதலிய எல்லோருக்கும் நடைபெற்றது. கலியாணப் பெண்ணும் வேலைக்காரியால் சம்பிரமமாக விருந்து உண்ணுவிக்கப்பட்டாள். மாசிலாமணியோ தனது பூத உடம்போடு மோக்ஷ லோகத்தை அடைந்தவன் போலத் தோன்றியதன்றி, பசி தாகம் முதலிய எவ்விதமான தேகபாதையும் அற்றவனாய் மனோன்மணி மனோன்மணி என்று சதாகாலமும் ஜெபம் செய்து, மறுநாளைய இரவு எப்போது வரும் வருமென்று ஆவலோடு எதிர்பார்த்து இருந்தான். அந்தக் கலியாணம் எவ்வித இடையூறும் இன்றி அவ்வளவு விரைவில் முடிந்ததைப் பற்றி மாசிலாமணி இடும்பன் சேர்வைகாரன் முதலியவர்கள் பன்மடங்கு களிப்புற்று அதைப் பற்றியே பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தனர். தாங்கள் அப்படிச் செய்ததனால் பட்டாபிராம பிள்ளை முதலிய தமது எதிரிகளைத் தண்டித்ததோடு, மகா அற்புதமான அழகும் கல்வி முதிர்ச்சியும் நிறைந்த பெண்மணியான மனோன்மணியை சுலபத்தில் அடைந்து விட்டதைப்பற்றி அவர்கள் இரட்டிப்புக் குதூகலம் அடைந்தவராய்ப் பொழுதைப் போக்கினார்.

மறுநாளாகிய செவ்வாய்க்கிழமை வந்து சேர்ந்தது. மலைபோல வளர்ந்த அன்றைய பகற்பொழுது எப்பொழுது தொலையப் போகிறதென்று நினைத்து மனோன்மணியைப் பற்றியே பகற்கனவு கண்டுகொண்டு மாசிலாமணி இன்பமும் துன்பமும் ஒரே காலத்தில் வதைப்பதான விபரீத உணர்ச்சியைப் பெற்றவனாய் ஆவலே வடிவாக வீற்றிருக்க, அப்போது அவ்விடத்திற்கு வந்த இடும்பன் சேர்வைகாரன், "என்ன எஜமானே! நாம் செய்த காரியத்தில் ஒரு பெருத்த தவறல்லவா நேர்ந்துவிட்டது! இதோ பாருங்கள். இது பட்டணத்தில் நேற்றைய தினம் வெளியான சமாசாரப் பத்திரிகை. பட்டாபிராம பிள்ளை வீட்டில் இருந்து நாம் பெண்ணை அபகரித்து வந்த விஷயம் இதில் வெளியிடப்பட்டிருக்கிற மாதிரியைப் பாருங்கள் என்று கூறிய வண்ணம் தனது கையில் இருந்த சமாசாரப் பத்திரிகையை நீட்ட, அதைக் கேட்டுத் திடுக்கிட்ட மாசிலாமணி