பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

95

மாசிலாமணி:- (சந்தோஷமாக நகைத்து) சரி; உம்முடைய இஷ்டத்திற்குத் தான் ஏன் பழுதுவர வேண்டும். பட்டணத்தில் போய்ப் பட்டபாடு உமக்கல்லவா தெரியும். மலைகல்லி எலி பிடித்தது போல நீர் இவளைக் கொண்டு வந்ததும் அன்றி, அதற்கு என்னிடம் பெருத்த சன்மானமும் வாங்கிக் கொண்டிருக்கிறீர். ஆகையால், இவளை எளிதில் விட்டுவிட உமக்குச் சம்மதி இராது தான். உம்முடைய பிரியப்படியே நடத்துகிறேன். அதில் எனக்குக் கஷ்டம் கொஞ்சமாவது இல்லை. கரும்பு தின்ன யாராவது கைக்கூலி கேட்பார்களா?

இ. சேர்வைகாரன்:- (சிறிது முகவாட்டமடைந்து) என்ன எஜமானே! நான் செய்தவற்றைத் தாங்கள் குத்திக் காண்பிப்பது போலப் பேசுகிறீர்களே! இது வேண்டும் என்று செய்யப்பட்ட தவறல்ல என்பது தங்களுக்குத் தெரிந்திருந்தும், தாங்கள் இப்படிச் சொல்லிக் காட்டுவது என் மனசை நிரம்பவும் புண்படுத்துகிறது. நான் இதற்கு முன் அந்த மனோன்மணியம்மாளை நேரில் பார்த்தவனே அல்ல. தாங்களாவது அவளைப் பார்த்திருந்து, அவளுடைய அடையாளங்களை விஸ்தாரமாக சொல்லி இருந்தால், இந்தத் தவறு நடந்திருக்காது. பட்டாபிராம பிள்ளையும், அந்தப் பெண்ணும் தனியாக புரசைபாக்கம் பங்களாவில் இருப்பதாக தாங்களும் சொன்னீர்கள். நான் பட்டணத்தில் போய் விசாரித்ததிலும், ஜனங்கள் அப்படியே தான் சொல்லிக் கொண்டார்கள். நாங்கள் அங்கே போன அன்றைய தினம் இந்தப் பெண்ணும் இன்னொரு மனிதனும் அங்கே வந்து புகுந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் எப்படித் தெரிந்து கொண்டிருக்க முடியும்? நடு இரவில் நாங்கள் பங்களாவில் நுழைந்து கீழே இருந்த வேலைக்காரர்கள் வேலைக்காரிகள் பட்டாபிராம பிள்ளை முதலிய எல்லோரையும் அடித்துக் கட்டிப் போட்டுவிட்டு, மெத்தை மேல் ஏறினோம். ஏறிய உடனே எதிரில் அழகான படுக்கையறை ஒன்று காணப்பட்டது. அவ்விடத்தில் ஏராளமான புஸ்தகங்கள் காணப்பட்டன. மனோன்மணியம்மாள் ஏதோ பரீட்சைக்குப் படிக்கிறாள் என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் அல்லவா.