பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

மாயா விநோதப் பரதேசி

அதுவுமன்றி, அந்தப் படுக்கை அறையில் இந்தப் பெண் தனியாகப் படுத்திருந்தாள். இவள் நல்ல அழகும் யௌவனமும் அலங்காரமும் உடையவளாய்ப் பெரிய மனிதர் வீட்டுப் பெண்ணைப் போலக் காணப்படவே, மனோன்மணியம்மாள் இவளாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. அந்த அவசர சமயத்தில் அவ்விடத்தில் அவளை விட்டு மற்ற பாகங்களில் எல்லாம் நுழைந்து இன்னம் வேறே பெண் எவளாவது இருக்கிறாளா என்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எப்பேர்ப்பட்டவருக்கும் உண்டாயிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆகையால், நான் உடனே ஆள்களை ஏவி, இவளைத் தூக்கிக் கொண்டு வந்து சேர்ந்தேன். இது தற்செயலாக நடந்த தவறே அன்றி என்னால் வேண்டும் என்று செய்யப்பட்டதல்ல. இதோடு நான் நம்முடைய பகைவர்களை எல்லாம் சும்மா விட்டுவிடப் போகிறேன் என்று தாங்கள் நினைத்துக் கொண்டீர்களா? நாங்கள் சொன்னது போல கண்ணப்பா, வடிவாம்பாள், கந்தசாமி, வேலாயுதம் பிள்ளை முதலிய ஒவ்வொருவருக்கும் மரியாதை நடத்தியே மறுவேலை பார்க்கப் போகிறேன். அதுவுமன்றி அந்தப் பட்டாபிராம பிள்ளையின் விஷயத்திலும் நம்முடைய பழியை வட்டியும் முதலுமாகத் தீர்த்து வைப்பேன் என்பதைத் தாங்கள் நிச்சயமாக எதிர்பார்க்கலாம். இன்றைய தினமே நான் மறுபடி ஆள்களை அழைத்துக் கொண்டு பட்டணம் போகிறேன். இந்தத் தடவை நாங்கள் போவதற்குப் பிடிக்கும் செலவு என்னைச் சேர்ந்ததாக இருக்கட்டும். என் தவறுக்கு அது அவசியம் வேண்டிய தண்டனை என்று நினைக்கிறேன். எனக்கும் என்னுடைய ஆள்களுக்கும் தாங்கள் கொடுத்த வெகுமதிகளை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுகிறோம். தங்களுடைய வேலைகளை எல்லாம் நாங்கள் திருப்திகரமாக முடித்துக் கொடுத்த பிறகு மறுபடி பெற்றுக் கொள்ளுகிறோம். இப்போது தங்கள் மனசுக்குத் திருப்திதானா?

மாசிலாமணி:- (சிறிது ஆயாசமடைந்து இளக்கமாகப் பேசத் தொடங்கி) என்ன சேர்வைகாரரே! உமக்குக்கூட கோபம் வந்தது?