பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

97

நான் வேடிக்கையாக ஒரு வார்த்தை சொன்னதை நீர் விபரீதமாக அர்த்தம் செய்து கொண்டு நிரம்பவும் கோபமாகப் பேசுகிறீரே! நான் என்ன அவ்வளவு அற்பகுணமுள்ள மனிதன் என்று நினைத்தீரா? எனக்கு எள்ளளவும் புத்தி இல்லை என்று எண்ணினீரா? இந்தத் தவறு தற்செயலாக நடந்ததென்பதை நான் தெரிந்து கொள்ளவில்லையா? இதற்காக நான் உங்களிடம் இருந்து சன்மானத்தை எல்லாம் திருப்பி வாங்கிக் கொள்ளக்கூடிய கேவல புத்தி உடையவர் என்று நீர் நினைத்துக் கொண்டீரா? அல்லது, நீங்கள் பட்டணத்திற்கு மறுபடியும் போய் வருவதற்கு ஏற்படும் செலவை நான் ஒரு பொருட்டாக மதிப்பேன் என்று நினைத்தீரா? என்னோடு இவ்வளவு காலம் நீர் பழகி இருந்தும் என்னுடைய உண்மையான மனப்போக்கை அறிந்து கொள்ளாமல் இவ்வளவு தூரம் கசப்பான வார்த்தைகளை நீர் சொன்னதுதான் என்னால் பொறுக்க முடியவில்லை. நான் உம்மைப் புரளி செய்தது போல ஒரு வார்த்தை சொல்லிவிட்டது தவறுதான். அது வேடிக்கையாகச் சொல்லப்பட்டதேயன்றி, நீர் மூடத்தனமாக நடந்து கொண்டீர் என்று இடித்துக் காட்டி உம்மைப் பழிக்க வேண்டும் என்ற கருத்தோடு சொல்லப்பட்ட தல்ல, ஆகையால், நீர் இனிமேலாவது என்னிடம் இப்பேர்ப்பட்ட வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம். நீர் என் அண்ணனை விடுவித்தும், திகம்பரசாமியாரைக் கொன்றதும் அற்ப சொற்பமான விஷயங்கள் அல்ல. அவை இரண்டிற்கும் நான் உமக்கு என் ஆஸ்தி முழுதையும் சன்மானமாகக் கொடுத்தாலும், அது சரியான மரியாதை ஆகாது. அதோடு நீர் இனி எனக்கு எவ்விதமான கெடுதல் செய்தால் கூட, மேலே குறித்த இரண்டு பேருதவிகளைக் கருதி நான் உமக்கு என்றும் நன்றியறிதல் உள்ளவனாய் இருக்கக் கடமைப்பட்டவன். ஆகவே, இதைப்பற்றி நீர் என்மேல் மனவருத்தம் வைக்கவில்லை என்று பிரமாணிக்கமாகச் சொன்னாலன்றி என் மனம் நிம்மதி அடையாது.

இ. சேர்வைகாரன்:- (கோபம் தணிந்தவனாய் நகைத்து) இல்லை, எஜமானே! தாங்கள் சொன்னதைப் பற்றி, தங்கள் பேரில் எனக்கு எவ்வித மனவருத்தமும் உண்டாகவில்லை.

மா.வி.ப.II-7