பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

5

மனித நலன்களுக்குத் தேவையான, மனிதனது நல்வாழ்க்கைக்கு அடிப்படையான எதையும் மார்க்சீயம் மறுக்கவில்லை என்பதைத் தமக்கே உரிய முறையில் எடுத்துக்காட்டுக்களுடன் பேராசிரியர் நா.வா. அவர்கள் எழுதியிருக்கின்றார்கள்.

பேராசிரியர் அவர்களது பிற நூல்களைப் போலவே இதுவும் அடிப்படைகளை அறிந்துகொள்ளவும் ஆய்வுமுறைகளைத் தெரிந்துகொள்ளவும் பயன்படுவதாக அமைந்திருக்கின்றது.

தமது நூல்களைத் தொடர்ந்து வெளியிட வாய்ப்பளித்து வரும் பேராசிரியர் அவர்களுக்கு இந்த ஆண்டுடன் அறுபது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. அறுபது நிறையும் மார்க்சீய ஆய்வுப் பேரறிஞர் பேராசிரியர் நா.வா. அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் அவரது பத்து நூல்களை அச்சிட மக்கள் வெளியீடு ஏற்பாடு செய்துள்ளது.

ஆய்வுப் பேரறிஞர் நா.வா. அவர்களின் பணி சிறக்க— மேலும் அவர்களிடமிருந்து பல்வேறு துறைகளில் வழிகாட்டுதல் பெறத் தமிழ் மக்களின் சார்பில் மக்கள் வெளியீடு விழைகின்றது.

மே.து.ராசுகுமார்

இரண்டாம் அச்சுக்கான பதிப்புரை

உள்ளடக்கத்தை முதன்மைப்படுத்தும் மார்க்சியம், உருவத்தை மேன்மைப்படுத்தவில்லை என்ற முன்னைய குற்றச்சாட்டை எடுத்துக்கொண்டு, மார்க்சியத்துக்கு மாற்றாகப் புதிய சில வரவுகளை முன்னிறுத்தும் பணியை இன்று சிலர் மேற்கொண்டிருக்கிறார்கள். மார்க்சியத்தைத் தவறு என்று சொல்வோரும் தவறாகப் புரிந்தோரும் இதில் அடங்குவர்.

அறிவியல் அடிப்படையிலான எந்த இயங்கியல் பார்வையும் மார்க்சியத்துக்கு உட்பட்டதுதான் என்பதை ஏற்றுக்கொள்ள இவர்கள் முன்வரவில்லை.

இவர்களுக்கு விளக்கம் கூறுவது போன்று 20 ஆண்டுகளுக்கு முன் பேரா.நாவா அவர்கள் எழுதிய நூல், மறு அச்சாகிறது.

கலையைக் கலையாகப் பார்ப்பதில் மார்க்சியத்துக்கு என்றும் மாற்று நோக்கு இருந்ததில்லை. ஆனால், கலையைக் கலைக்காக மட்டுமே பார்ப்பதை மார்க்சியம் மறுக்கிறது.

மார்க்சியத்தை எதிர்ப்போருக்கு எப்படி ஒரு பின்னணி இருக்கிறதோ, அதே போன்று மார்க்சிய அழகியலில் குறை காண்போருக்கும் ஒரு நோக்கம் இருக்கவே செய்கிறது.

இந்த வகையில் இந்நூல் தெளிவான மார்க்சிய அழகியல் பார்வையை முன் வைக்கிறது.
05-08-1999 மே.து.ரா.