பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. பி. சிற்றரசு

5


டிருந்த நேரம். போப்பாண்டவர் வருகிறார், என்றால், சூரியனோ, சந்திரனோ, இடம்விட்டுப் பெயர்ந்து பூலோகத்துக்கு வந்ததைப் போலவே நினைத்து, வேண்டிய மரியாதைகள் செய்து, தன் பசிக்காக, ரொட்டித் துண்டுகளை வாங்க வைத்திருந்த கடைசி காசையும் போப்புக்குப் பாதகாணிக்கையாகச் செலுத்திவிட்டு, பசித்த வயிற்றைத் தன் கையால் தடவிக்கொண்டு, "பசி ஒழியவில்லை, ஆனாலும் பாபம் ஒழிந்தது, அதுவே போதும்," என்று அறியாமைக் குட்டையில் அற்ப சந்தோஷத்தோடு நீந்திய நிரபாதிகள் நிரம்பியிருந்த நேரம்.

விடி வெள்ளி

சாம பேத தான தண்டம் என்ற சதுர்வித உபாயங்களை நம் நாட்டுப்பழமை வைத்திருந்ததைப் போல், அங்கும், அன்பாகப் பேசுவது, ஆசீர்வதிப்பது, அணைக்க வருவது, எதிர்த்தால் ஏசுவது அதற்கும் கட்டுப்படாவிட்டால், உரத்த குரலில் ஊர் அறியச் சொல்வது, மதப்பிரஷ்டம் செய்வது, சமூகப்பிரஷ்டம் செய்வது, அதையும் தாங்கி நின்றால் அரசனிடம் சொல்வது, வீண்பழி சுமத்துவது, விலாமுறிய அடிப்பது, கசை கொண்டடிப்பது, அங்கேயும் எதிர்த்தால் தூணில் கட்டிச் சாட்டையால் அடிப்பது, அதற்கும் கட்டுப்படாவிட்டால் தீயில் தள்ளிக் கொல்வது என்ற பல படிகளைப் பாராளுமன்றத்துக்கே உரிமையாக்கி இருந்தார்கள் இந்த பசுத்தோல் போர்த்து போப் உருவில் நடமாடிய புலிகள்.