பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

மார்ட்டின் லூதர்எப்படி இரண்டாம்பிலிப் என்ற மன்னன் இயேசுவை நிறுத்தி விசாரிக்கிறபோது, தன்னை வளர்த்த இடையனே தன் உடலில் வளர்ந்திருக்கும் ரோமத்தைக் கத்தரிக்கும்போது எப்படி ஆடாமல் அசையாமல் ஆடு நின்றதோ அதைப் போலவே இயேசு, தன் மரண தண்டனையைக் கேட்டு ஆடாமல் அசையாமல் நின்றார் என்று சொல்லப்படுகிறதோ, அதைப் போலவே லூதர் ஸ்தம்பித்து நின்றுவிட்டான். தனது ஏமாற்றத்தை எண்ணி எண்ணி மனம் கசிந்தான். எழுத்துக்கும் இயற்கைக் குணத்துக்கும் எவ்வளவு இடைவெளியெனக்கருதினான். சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள தாண்ட முடியாத பள்ளத்தை எண்ணி மனம் புழுங்கினான்.

மதக் கோட்பாடுகளை ஏதுமறியாத பாமர மக்கள்தான் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும், மதத் தலைவர்களுக்கு அந்த விதியில்லை என்பதை ஜாடையாகக் காட்டுவதைப் போன்றிருந்த சண்டாளத் தனத்தைச் சவக் குழிக்கு அனுப்ப எண்ணினான், மானாபிமானம், மக்கள் அனுசரிக்க வேண்டிய முறை, மதத் தலைவர்களுக்கு அந்தக் கட்டாயமில்லை என்ற மடக் கொள்கையை இடம் தெரியாமல் ஓட்ட திட்டமிட்டு விட்டான். கோபச் சிரிப்பு கொப்பளித்த கண்ணீர் நெஞ்சுரம், நீதியிலே நாட்டம் ஆகிய இந்தப் படைகளின் துணை கொண்டே ரோமாபுரியை விட்டு வெளியேறினான்.