பக்கம்:மின்னல் பூ.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதிது புதிதாக யாப்புக்களை அமைக்க வேண்டும் என்பதில் எனக்கு நிறைந்த ஆர்வம் உண்டு. எவ்விதமான கட்டுப்பாட்டிற்கும் அடங்காமல் மனம் போனவாறெல்லாம் எழுதவேண்டும் என்பதல்ல என்னுடைய நோக்கம். புதிய யாப்புக்களும் திட்டமான சில விதிகளைப் பின்பற்றி நடக்கவேண்டும். வசன கவிதை ஒன்று தான் இந்த விதிக்குச் சற்றுப் புறம்பாக இருக்கலாம். இத்தொகுப்பில் உள்ள கவிதைகளை ஆராய்கின்றவர்கள் எனது புதிய யாப்பு முயற்சிகளை அறிந்து கொள்ளுவார்கள்.

மேல் நாட்டுக் கவிதைகளில் ‘சானெட்’ என்பது ஓர் அழகான யாப்பு வகை. அது பதினான்கு வரிகள் கொண்டது; வேறு பல இலக்கண வரம்புகளும் உடையது. தமிழிலே ‘சானெட்’ முறையில் கவிதை எழுத வேண்டும் என்ற முயற்சிகள் முன்பே நடந்திருக்கின்றன. ஆனால், அந்த முயற்சிகளிலே பதினான்கு வரிகள் வேண்டும் என்கிற விதி தான் முக்கியமாகக் கவனிக்கப்பட்டதாக நான் கருதுகிறேன். வேறு சில விதிகளையும் அமைத்துக்கொண்டு ‘சானெட்’ எழுத வேண்டும் என்ற ஆவலின் விளைவாக எழுந்தது. ‘தருவாய்’ என்ற தலைப்புடைய கவிதை.

எடுத்துக்காட்டாக ஒரு கவிதையைப் பற்றிக் கூறினேன். மற்ற புதிய யாப்பு முயற்சிகளை நீங்களே கண்டுகொள்ளலாம்.

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/11&oldid=1110312" இலிருந்து மீள்விக்கப்பட்டது