பக்கம்:மின்னல் பூ.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஈசல்


பறந்தது கல் பறந்ததேன் அதற்குச்
சிறகினைத் தந்தவன் தீச்செய லோஅது?
அவியா தெழுந்தது அளவிலாக் காமம்
தவமார் சான்றோர் தம்மையும் தகிப்பதாம்-
உடலினை நச்சி ஓங்கிய நெருப்பின்
கொடுமையால் ஈசல்கள் கொதித்துவான் எழுந்தன:

தேடியே இணைதமைத் திசையெலாம் ஏங்கின;
கோடியென் றாலும் குறையாம் -அவற்றைக்
காக்கையும் கழுகும் கரிச்சான் வகைகளும்
தாக்கியே கவ்வித் தம் விருந்தாக்கும்:-
இம்மியோர் கணமாம் ஈசலின் வாழ்வும்

வம்மினோ இந்த வாழ்வினை உன்னுவோம்-
பெற்றதோர் யாக்கையால் பெரும்பணி புரியா
தற்றை நாளின்பத் தழுந்தலோ பெறும்பயன்?
அறிவெனும் சிறகினை அடைந்தநாம் உலகம்
குறையிலா தோங்கிடக் குறிப்பதே சிறப்பாம்.


ஐப்பசி தம் அடைமழைக் காலம். அம்மாதத்திலே ஒரு நாள் காலையில் கழனிகளின் வழியே செல்லும் போது ஏற்பட்ட நிகழ்ச்சி இக்கவிதைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/36&oldid=1116712" இலிருந்து மீள்விக்கப்பட்டது