பக்கம்:மின்னல் பூ.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மலையொன்று

மலையொன்று தூரத்திற் கண்டேன்- யானை
மண்டி யிட்டுள்ளது போலே
தலையினைத் தூக்கி நிமிர்ந்தே -கையைத்
தாளின் முன் நீட்டவுங் கண்டேன்

நீலத்து மாமணி யதுவே- அதன்
நெற்றியிற் பட்டயம் பாரீர்
பாலில் விளைந்தவெண் மஞ்சு - அங்கு
பட்டய மானது ஆஹா!

வானத்தைத் தாங்குவ துண்டோ -அன்றி
மழை கொண்ட முகில்விளை யாட்டோ
மோனப் பெருநிட்டை தானோ - மறை
மூலஓங் காரத்தின் வடிவோ

நீலத்துக் குள்வளர் நீலம் -என்றன்
நெஞ்சை யிழுத்திடும் நீலம்
ஆலம் பழுத்த நல் நீலம் - எங்கள்
அன்னை பயங்கரி கோலம்

கண்டங்கு நான்மெய் மறந்தே- அந்தக்
காட்சியில் உள்ளம் நிறைந்தேன்
மண்டலச் செண்டுவான் பாய்ந்து-கதிர்
மன்னன் எழுந்தருள் நேரம்

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/41&oldid=1116797" இலிருந்து மீள்விக்கப்பட்டது