பக்கம்:மின்னல் பூ.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நினைவு


நீரினில் மூழ்கி நிறைந்து பூரித்து
வாரியில் ஓடிடும் மாடுகள் ஈர்க்க
வந்துநீர் சிந்தி வதங்கியே திரும்பும்
அந்தரத் தூசல் ஆடிடும் தோற்சால்
காணவும் தோழ! கலங்கிடும் உள்ளம்
வாணுதல் மடந்தை மகிழ்நகை பூப்ப
வாயிலில் வந்தென் வருகை காணாமல்
ஆய்கலை சோர அழகெலாம் வாடச்
சென்றிடும் திரும்பிடும் திரையலை போல்வாள்
என்றுநான் வருமென ஏங்கிடும் அதனால்
கொண்டநீர் வேட்கையும் குறைந்தனன்
மொண்டகை நின்றிட மூண்டது சோகமே.

கணவன் தன் தோழனோடு நாட்டுப்புறத்திலே எங்கோ போய்க் கொண்டிருக்கிறான். அவன் மேற்கொண்டு வந்த கடமை இன்னும் முடியவில்லை, ஆனால் அவன் திரும்பி இல்லம் வந்து சேருவதற்காகக் குறித்தநாள் அணுகிவிட்டது. அந்த நிலையிலே அவன் தாகவிடாயைத் தணித்துக்கொள்வதற்காக ஒரு கிணற்றருகே செல்லுகிறான். கபிலையில் எருதுகளைப் பூட்டித் தோட்டத்திற்குத் தண்ணீர் இறைத்துக்கொண்டிருக் கிறார்கள். தண்னரீரைத் தாங்கி மேலே வருகின்றபோது தோற்சால் அழகாக விளங்குகிறது. தண்ணீரைக் கொட்டி விட்டுக் கிணற்றுக்குள் திரும்பும் போது அது வதங்கிச் சுருங்கி அழகிழந்து காண்கிறது. இதைக் கண்ட அவனுக்குத் தன் மனைவியின் நினைவு வந்து விடுகிறது.

59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/59&oldid=1117610" இலிருந்து மீள்விக்கப்பட்டது