பக்கம்:மின்னல் பூ.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விலங்கு நெறி

வாழ்வுண்டோ? என்றெல்லாம் மனக்குகையின் காரிருளின்
கீழ்நின்ற பேய்க்கூட்டம் கிளுகிளுக்க எண்ணங்கள்
மேலெழுந்து பொங்கிடவே வெம்பிமிகக் சோர்வுற்றே :-
சீலம் எதற்கிங்கே? செந்நெறியும் ஏன் வேண்டும்?
என்றே தளர் வெய்தி ஏங்கிக் கிடந்தேன் நான்
குன்றுக்குப் பின்கதிர்கள் கும்பிக்க இருள்பரவி
அந்திவெள்ளி கண்டேன்; அருமணிகள்பல மெதுவாய்
வந்தென்றன் உள்ளத்தை வானுலகம் இழுத்தனவே.
இயற்கையிலே கீழ்வரம்பில் இந்நெறிதா னென்றாலும்
இயற்கையதின் சிகரத்தே எழுந்துவரும் மானிடனும்
புதுமை நெறியொன்றினையே புகுத்திடவும் கூடாதோ?
மதியென்றும் மனமென்றும் வாய்த்ததனிப் பயனென்ன?
திருந்தாப்பேய் நெறிபற்றிச் செல்லுவதிற் சிறப்புண்டோ?
பொருந்தாத விலங்குநெறி போக்கிடவே மதிபெற்றான்
அற்பக்கீழ் உணர்ச்சியெலாம் அறமாற்றித் தெய்விகமாம்
நற்பண்பு மானிலத்தே நாயகமாய் நின்றென்றும் -
அன்பு நெறி ஆட்சிசெய அவனியற்ற வல்லானேல்-
இன்ப நிலை தோன்றிவிடும்; இதுவே யவன்கடமை-
என்றதொரு பேருண்மை இருள் கிழித்துச் சுடரிடவும்
நன்றுள்ளம் பூரிக்க நானெழுந்து நடந்தேனே.

79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/79&oldid=1121401" இலிருந்து மீள்விக்கப்பட்டது