பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

மரியாதையாகச் சொல்கிறேன்; உம்முடைய பெண்ணை அடக்கி வையும்!' என்று அவர் ‘ருத்திர தாண்டவம்’ ஆட, ‘யாரிடம் சொல்கிறீர்? நீர் முதலில் உம்முடைய பையனை அடக்கி வையும்!' என்று இவர் ‘ஊழிக்கூத்'தே ஆட, அதற்குள் அவருடைய சகதர்மிணி 'தா, தை’ என்று அங்கே வந்து, ‘என்னதான் இருந்தாலும் இப்படியா? ஆற்ற மாட்டாமல் பெண்ணைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு அகமுடையான் தேடி வைக்கவும் அறிவு இருக்க வேண்டாமா? அதற்காக இப்படியா ஊரை மேய விடுவது? தூ!’ என்று கீழே துப்ப, 'யாரைப் பார்த்துக் கீழே துப்புகிறாய்? அயலான் வீட்டுப் பெண்ணின் தலையில் கை வைக்கும் அழகான பிள்ளையைப் பெற்று வைத்துக் கொண்டிருக்கும் நீயா என்னைப் பார்த்துக் கீழே துப்புகிறாய்? உன் மூஞ்சியிலேயே நான் துப்புகிறேன். பார்! தூ!’ என்று இவருடைய மனைவி அவள் முகத்திலேயே துப்ப, இருவரும் ஒருவர் தலை முடியை ஒருவர் வளைத்துப் பிடித்துக்கொண்டு, முடிந்த மட்டும் அடித்துக் கொள்வாராயினர்.

தாங்கள் குடுமியைப் பிடித்துக் கொள்வதற்குப் பதிலாகத் தங்கள் மனைவிமார் இருவரும் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு நிற்பதைக் கண்ட கணவன்மார் அப்படியே திகைத்துப் போய் நிற்க, அதற்குள் அவர்கள் இருவரும் ஒருவர் சவுரியை ஒருவர் பிடுங்கிக் கையில் வைத்துக் கொண்டு, 'மரியாதையாக என் சவுரியைக் கொடுடி!’ என்று அவளை இவளும், 'மரியாதையாக என் சவுரியைக் கொடுடி’ என்று இவளை அவளும் இரைக்க இரைக்கக் கேட்டுக் கொண்டு நிற்பாராயினர்.

இந்தச் சமயத்தில் தங்கள் மனைவிமாரின் உண்மையான முடியின் அளவை உள்ளது உள்ளவாறு தெரிந்து கொண்ட கணவன்மார் இருவரும் தங்களுக்குள்ளே சிரித்தபடி அவர்களுக்கிடையே புகுந்து, அவளுடைய சவுரியை இவளிடமும், இவளுடைய சவுரியை அவளிடமும் வாங்கிக் கொடுத்து விட்டுத் தங்கள் தங்கள் வீடு நோக்கி நடக்க,